×

பாளை. கோபாலசுவாமி கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் திரளானோர் வடம் பிடித்தனர்

நெல்லை,  மார்ச் 1:  பாளையின்  மையப்பகுதியில் ராஜகோபாலசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலிலுக்கு சொந்தமான தேர் பிரதி பங்குனி பிரமோத்சவ உற்வத்தின்போது  பங்குனி உத்திர நாளில் ரதவீதிகளில் இழுக்கப்படும். இந்த கோயில்  தேர் பல ஆண்டுகளாக பழுதடைந்திருந்தது. பக்தர்கள் கோரிக்கையை ஏற்று புதிய தேர் செய்வதற்கான நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டன. உபயதாரர் நிதி உதவியுடன் ரூ.54 லட்சத்தில் தேர் அமைக்கும் பணிகள்  நடந்தது.  கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புதிய தேர் கோயில்  வளாகப் பகுதியிலேயே வடிவமைக்கப்பட்டது. தேரின் மேல் பகுதி அலங்கார தட்டுகள்  நிரந்தரமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பெல்  நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 4 இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தேரின்  உள்பகுதியில் 2 துணை சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர் கோயிலின் முகப்பு  பகுதியில் 4 குதிரை பொம்மைகள் பூட்டப்பட்டு அலங்கரித்து  வைக்கப்பட்டுள்ளது. விஷ்ணுக்கு உரிய லட்சணங்களுடன் அமைக்கப்பட்டுள்ள  இத்தேரில் தசாவதார சிற்பங்கள், கண்ணன் லீலைகள், 12 ஆழ்வார் சிற்பங்கள்  உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. திருமழிசை கஜேந்திர ஸ்பதி குழுவினர்  வடிமைத்துள்ளனர். தேரை இழுக்க சங்கிலி வடம்  பொருத்தப்பட்டுள்ளது. இப்பணி முழுமையாக முடிந்ததையடுத்து நேற்று காலை 9.30 மணிக்கு மேல் தேர் வெள்ளோட்டம் நடந்தது. இதை முன்னிட்டு தீர்த்த  குடம் வைத்து சிறப்பு கும்ப பூஜை நடத்தப்பட்டது. பின்னர் தீர்த்தக்குடம்  மேளதாளம் முழங்க தேரில் வைக்கப்பட்டது. தொடர்ந்து தீபாராதனையுடன்  வாணவேடிக்கைகள், மேளதாளம் முழங்க தேர் இழுக்கப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் காலையிலேயே திரண்டு வந்து தேரை இழுக்க ஆர்வம்  காட்டினர். பகல் 12.05 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை கோயில்  நிர்வாக அலுவலர் ராம்குமார் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் குழுவினர்  செய்திருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு முன்னிட்டு பலத்த போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர் ஓடிய சாலைகளில் தேர் கடக்கும் வரை  போக்குவரத்து மாற்றப்பட்டது. மேலும் ரதவீதிகளில் மின்தடை  செய்யப்பட்டிருந்தது. தேர் ரதவீதிகளை  கடந்ததும் உடனடியாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.

Tags :
× RELATED திருச்சுழி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்: இலக்கை நோக்கி சீறிய காளைகள்