×

கோயில் இடத்தில் குடியிருப்பவரிடம் வாடகை நிலுவை ரூ.4.10 லட்சம் வசூல் ஆண்டிபட்டியில் அறநிலையத்துறை அதிரடி

ஆண்டிபட்டி, மார்ச் 1: ஆண்டிபட்டியில் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமான 1,700 சதுரடி மற்றும் 533 சதுரடி பரப்பளவுள்ள இரண்டு பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகட்டி குடியிருந்தவர்களில் சிலர் கோயிலுக்கு கடந்த 10 ஆண்டுகளாக வாடகை செலுத்தவில்லை. இதையடுத்து, தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை உத்தரவுப்படி சட்டப்பிரிவு 79ன் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து தேனி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கலைவாணன், ஆலய நிலங்கள் வட்டாட்சியர் பிரதீபா, கோயில் செயல் அலுவலர் தங்கலதா, சரக ஆய்வர் கார்த்திகேயன் மற்றும் செயல் அலுவலர்கள் சுரேஷ், வைரவன், போத்திச்செல்வி, நரசிம்மன் ஆகியோர் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளரிடம் வாடகை நிலுவை ரூ.4.10 லட்சத்தை கட்டுவதற்கு நேற்று மதியம் 1 மணி வரை கெடு விதித்தனர்.

இல்லையென்றால் வீடு சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர். இதை தொடர்ந்து கோயில் குடியிருக்கும் உமா மகேஸ்வரி என்பவர் மதியம் 1 மணியளவில் ரூ.4 லட்சத்து 10 ஆயிரத்தை கோயில் நிர்வாகத்திடம் செலுத்தினார். இதையடுத்து ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது. அப்போது ஆண்டிபட்டி டிஎஸ்பி தங்ககிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சிவகுமார், போலீசார், வருவாய் துறையினர், திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags : Andipatti ,
× RELATED பாஜவுடனான கூட்டணியால் எடப்பாடிக்கு அச்சம்: டிடிவி தினகரன் பேட்டி