×

பென்னாகரம் அருகே இல்லம் தேடிக்கல்வி திட்டம் குறித்து தன்னார்வலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி

தர்மபுரி, பிப்.26: பென்னாகரம் குள்ளனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், இல்லம் தேடிக்கல்வி திட்டம் குறித்து தன்னார்வலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில், தமிழக அரசு இல்லம் தேடிக் கல்வி எனும் திட்டத்தை செயல் படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பென்னாகரம் குள்ளனூர் குறுவளமையத்தை சேர்ந்த 14 பள்ளிகள் அமைந்துள்ள, கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களில் பணியாற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கான, 2ம் கட்ட பயிற்சி, பென்னாகரம் குள்ளனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இப்பயிற்சியில் 60க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

தன்னார்வலர்கள் தாங்கள் தயார் செய்த கற்றல், கற்பித்தல் உபகரணங்களை காட்சிப்படுத்தியும், அதை எவ்வாறு பயன்படுத்துவது என்ற விளக்கத்தையும் அளித்தனர். மேலும் ஆசிரியப்பற்றுனர்கள் வேடியப்பன், மகேஷ் ஆகியோர் 2ம் கட்ட கையேட்டில் உள்ள பாடங்களை அறிமுகப்படுத்தி விளக்கம் அளித்தனர். தன்னார்வாலர்கள் தங்கள் கற்பித்தல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை குறுவளமைய தலைமையாசிரியர் சிங்காரவேலன் ஏற்பாடு செய்திருந்தார்.


Tags : Pennagaram ,
× RELATED ஒகேனக்கல்லுக்கு திடீரென 2500 கனஅடியாக...