நரிக்குடி பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பு முதல்வருக்கு விவசாயிகள் நன்றி

காரியபட்டி, பிப். 26: நரிக்குடி அருகே க.பூலாங்குளம் ஊராட்சி எஸ்.நாங்கூரில் கிருதுமால் நதிநீர் விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் தலைவர் பசீர்அகமது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், காவிரி-குண்டாறு இணைப்புத்திட்டம், முல்லைப் பெரியாறு அணையில் கிருதுமால் நதிநீர் பங்கீடு, கிருதுமால் ஆற்றின் நிரந்தர ஆயக்கட்டு உரிமை ஆகியவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 46 கிராமங்களின் கண்மாய் பயனாளர்களும், பொறுப்பாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த நான்கு மாதமாக விரகனூர் முதல் அபிராமம் பகுதிவரை பாசனத்திற்கு தண்ணீர் வருவதற்கு உத்தரவிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், முயற்சி செய்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும் வைகை-கிருதுமால் நதிநீர் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக கிருதுமால் நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் பஷீர் அகமது கூறுகையில், காவிரி- வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தின் நீண்டகால தென்னக நிதி இணைப்பு திட்டத்தை ரூ.14,400 கோடி செலவில் முதல் கட்டமாக மாயனூர் முதல் புதுக்கோட்டை வரையிலும், இரண்டாவது கட்டமாக புதுக்கோட்டை முதல் வைகையாறு பகுதி வரையிலும், மூன்றாவது கட்டமாக வைகை பகுதியிலிருந்து குண்டாறு பகுதி வரையிலான திட்டங்களை நிறைவேற்றும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது. அதனைச் செயல்படுத்தும் விதமாக நபார்டு வங்கியின் வாயிலாக அதற்கான நிதியை பெற்றுக்கொள்வதற்கான உத்தரவு பெறப்பட்ட நிலையில், தற்போது முதல்கட்ட திட்டமான மாயனூர் முதல் புதுக்கோட்டை வரையிலான திட்டம் 2022ம் ஆண்டிற்கான நிதியாக சுமார் 7,400 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2022-23ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் மீதமுள்ள இரண்டாவது, மூன்றாவது, இலக்கு திட்டங்களை நிறைவேற்றும் வகையில் அதற்கான நிதியை பெற்று ஓராண்டிற்குள் இந்த பகுதியில் செயல் திட்டங்களை நிறைவேற்றி தரவேண்டுமென வைகை கிருதுமால் நதிநீர் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம் என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் சங்க துணைத்தலைவர் நடராஜன், செயலாளர் உறங்காபுலி, பொருளாளர் ராஜாங்கம், நரிக்குடி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் கலந்து கொண்டனர்.

Related Stories: