×

நாவலூர் பழைய மாமல்லபுரம் சாலையில் சேதமான நடை மேம்பாலத்தை சீரமைக்க வேண்டும்; இரும்பு கம்பிகள் உடைந்து இடிந்து விழும் அபாயம்

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த நாவலூர் ஓஎம்ஆர் சாலையில், பொதுமக்கள் பயன்படுத்தும் நடை மேம்பாலத்தின் இரும்புகம்பிகள் துருப்பிடித்து, உடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் இடிந்து விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையை அடுத்த புறநகர் பகுதியான நாவலூர் ஓஎம்ஆர் சாலை, ஏகாட்டூர் சுங்கச்சாவடி அருகே தகவல் தொழில்நுட்ப பூங்கா உள்ளது. இங்கு தினமும் வரும் மென்பொருள் பொறியாளர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் அதிக வாகனப் போக்குவரத்தால் சாலையைக் கடப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து சென்னையின் முக்கிய சாலைகளில் இருப்பதுபோல், அங்கு பொதுமக்கள் சாலையை கடந்து செல்வதற்காக நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது.

ஆனால், மிகவும், உயரமாக அமைக்கப்பட்டதால், பெண்கள், மூத்த குடிமக்கள் அதில் ஏறி இறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், பெரும்பாலானோர் இந்த நடை மேம்பாலத்தை பயன்படுத்துவது இல்லை. இதன் காரணமாக நடை மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாடின்றி துருப்பிடித்து காணப்படுகிறது. பல இடங்களில் நடை மேம்பாலத்தின் தரைப்பகுதியில் உள்ள இரும்பு தகடுகளில் ஓட்டை விழுந்து, எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் அபாயகரமாக உள்ளது. மேலும், கைப்பிடிகளும், பக்க வாட்டு தகடுகளும் பெயர்ந்து காணப்படுகிறது.
எப்போதாவது ஓரிருவர் மட்டுமே சாலையை கடக்க இந்த நடை மேம்பாலத்தை பயன்படுத்துகின்றனர்.

மற்றபடி பலரும் சாலையின் குறுக்கே உள்ள தடையை தாண்டியே சாலையைக் கடந்து செல்கின்றனர். இதையெட்டி, இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் இந்த நடை மேம்பாலத்தில் கஞ்சா விற்பனையும், மது அருந்துதல் உள்பட பல்வேறு சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. எப்போதாவது வரும் பெண்கள், குழந்தைகள் இந்த சமூக விரோதிகளின் தொல்லையால் இந்த நடை மேம்பாலத்தை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, ஓஎம்ஆர் சாலை, நாவலூர் சுங்கச்சாவடி அருகே உள்ள நடை மேம்பாலத்தை பராமரிக்கும் தகவல் தொழில்நுட்ப நெடுஞ்சாலை நிறுவனம், புதிய நடை மேம்பாலம் அமைக்க வேண்டும். அதில் சென்னையில் உள்ளது போன்ற எஸ்கலேட்டர் எனப்படும் நகரும் படிக்கட்டுகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nawalur old ,Mamallapuram road ,
× RELATED கம்பெனி- கல்லூரி பேருந்துகள் மோதி...