×

வருசநாடு அருகே சுட்டெரிக்கும் வெயிலால் வனப்பகுதியில் காட்டு தீ

வருசநாடு, பிப். 25: வருசநாடு அருகே விருதுநகர் மாவட்டம் சாப்டூர் வனச்சரகத்தில் அமைந்துள்ள பஞ்சம்தாங்கி மலைத்தொடரில் நேற்று இரவு காட்டுத் தீ பரவியது. இந்த மலைத்தொடரின் மற்றொரு பகுதி கண்டமனூர் வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த நிலையில் நேற்று மாலை சாப்டூர் மலைப்பகுதியில் திடீரென காட்டு தீ பரவியது. பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென கண்டமனூர் வனப்பகுதியில் பரவ தொடங்கியது. இதனையடுத்து ஏற்கனவே தயார் நிலையில் இருந்த 25க்கும் மேற்பட்ட கண்டமனூர் வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு கண்டமனூர் மலைப்பகுதியில் பரவிய காட்டுத்தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர்.

தொடர்ந்து வனத்துறையினர் பஞ்சம்தாங்கி மலையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக கண்டமனூர் வனச்சரகர் ஆறுமுகம் கூறுகையில், ‘கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளதால் மலைப்பகுதியில் அனைத்து புற்கள், செடிகள் காய்ந்த நிலையில் உள்ளது. எனவே காட்டு தீ ஏற்படுவதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் தொடர்ந்து மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் எளிதில் தீப்பற்றக்கூடிய தீப்பெட்டி, மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றை மலைப்பகுதிக்கு எடுத்துச் செல்லக்கூடாது என பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.’ என்றார்.

Tags : Varusanadu ,
× RELATED மூலவைகை கரையோரங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்