×

கொள்முதலில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து காவிரி டெல்டா விவசாயிகள் மறியல் போராட்டம் அறிவிப்பு

வல்லம், பிப்.25: நெல் கொள்முதலில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வரும் 28ம் தேதி தஞ்சை-திருச்சி நெடுஞ்சாலையில் காவிரி டெல்டா விவசாயிகள் சாலை மறியல் செய்ய போவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு பேரவை தலைவர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளதாவது: காவிரி டெல்டாவில் தற்போது சம்பா மற்றும் தாளடி பயிர்கள் அறுவடை நடந்து வருகிறது. இதுவரை 40 சதவீதம் வரைதான் அறுவடை முடிந்துள்ளது. தஞ்சை மாவட்டம் பூதலூர், அய்யனாபுரம், தொண்டராயன்பட்டி, சித்திரக்குடி, வல்லம், ஆலக்குடி, ஆவாரம்பட்டி உட்பட பல பகுதிகளில் இன்னும் அறுவடைப்பணிகள் முடியவில்லை. இந்நிலையில் தற்போது திறக்கப்பட்டுள்ள நெல்கொள்முதல் நிலையங்கள் போதுமான அளவில் தினமும் நெல் பிடிக்கும் அளவை அதிகரிக்கவில்லை. 40 சதவீதம் நிறைவடைந்த அறுவடை நெல்லே இன்னும் கொள்முதல் செய்யப்படாத நிலையில் தற்போது பிறபகுதிகளில் அறுவடை முடிந்து வரும் நெல்லை பிடிப்பதில் வெகுவாக தாமதம் ஏற்படும், தினமும் 1500 மூட்டைகள் வரை நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட வேண்டும். மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. அறுவடை முடித்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. இது பாடுபட்டு உழைக்கும் விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் செயலாக உள்ளது. இதுபோன்ற நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு ஆகியவை உடன் நடவடிக்கை எடுத்து கொள்முதலை விரைவுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கிப்பட்டியில் வரும் 28ம் தேதி காலை காவிரி டெல்டா விவசாயிகள், ஊராட்சி மன்றத்தலைவர்கள் இணைந்து மாபெரும் சாலைமறியல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Delta Farmers' ,
× RELATED உலக நோயாளிகள் தினத்தை முன்னிட்டு...