×

நடராஜர் கோயில் தீட்சிதர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

சிதம்பரம், பிப். 25: சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் ஏற சென்ற பெண் பக்தர் ஜெயஷீலா என்பவரை தீட்சிதர்கள் தாக்கி சாதி பெயரை சொல்லி திட்டியதாக அவர் அளித்த புகாரின்பேரில், 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், நடராஜர் கோயிலை தமிழக அரசு தனிச்சட்டம் இயற்றி நிர்வாகத்தை ஏற்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் சிதம்பரத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், திராவிடர் கழக பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, சிதம்பரம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் சந்திரபாண்டியன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் பேராசிரியர் இளங்கோவன், தலைமை நிலைய பேச்சாளர் யாழ்திலீபன், விசிக மாவட்ட செயலாளர் பால அறவாழி மற்றும் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தீட்சிதர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கோயிலை அரசு ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களை கண்டித்து சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து போராட்டம் நடத்தி வருவது சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Natarajar Temple ,Dikshitars ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...