×

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுக தம்பதி அபார வெற்றி

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி தேர்தலில் போட்டியிட்ட திமுகவை சேர்ந்த கணவன், மனைவி அபாரமாக வெற்றி பெற்றனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்று, முடிவுகள் 22ம் தேதி வெளியானது இதில் திமுக, அதிமுக, பாஜ, காங்கிரஸ், பாமக,   கம்யூனிஸ்ட் எம்எல், சுயேச்சைகள் என 15 வார்டுகளில் 59 பேர் போட்டியிட்டனர். இதில், திமுக 13 பேரும், அதிமுக 2 பேரும் என 15 பேர் வெற்றி பெற்றனர்.  

இதில் திமுக சார்பில் ஊத்துக்கோட்டையின் இதயம் போன்ற பகுதியான நேரு பஜார் பகுதியான 7வது வார்டில் திமுக முன்னாள் பேரூர் செயலாளர் குமரவேலு போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் பேரூராட்சி தலைவரும், முன்னாள் பேரூர் செயலாளரும், முன்னாள் அமமுக மாநில அமைப்பு செயலாளருமான ராசமாணிக்கம் போட்டியிட்டார். இதில், குமரவேலு 392 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ராசமாணிக்கம் 157 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். குமரவேலுவின் மனைவியும் திமுக பொதுக்குழு உறுப்பினருமான அபிராமி 4வது வார்டில் 234 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதேபோல், ஊத்துக்கோட்டை பேரூர் செயலாளர் அப்துல் ரஷீத் 3வது வார்டில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக பேரூர் செயலாளர் ஷேக்தாவுத் போட்டியிட்டார். இதில், அப்துல் ரஷீத் 180 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஷேக் தாவுத் 147 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அப்துல் ரஷீத்தின் மனைவி ஆப்தாப்பேகம் 10வது வார்டில் போட்டியிட்டார். இவர், 154 வாக்குகளும்,  சுயேச்சை வேட்பாளர் சாந்தி 154 வாக்குகளும் பெற்று சமநிலை வாக்குகள் பெற்றனர். இதில், குலுக்கல் முறையில் திமுக ஆப்தாப்பேகம் வெற்றி பெற்றார். ஊத்துக்கோட்டையில் குமரவேலு அவரது மனைவி அபிராமி, அப்துல் ரஷீத் அவரது மனைவி ஆப்தாப்பேகம் ஆகிய கணவன் மனைவி வேட்பாளர்கள் 4 பேரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Tags : DMK ,Uthukkottai ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி