×

தேனி அல்லிநகரம் நகராட்சியில் திமுக தம்பதியர் அபார வெற்றி

தேனி, பிப். 24: தமிழகத்தில் நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அதிக வார்டுகளை கைப்பற்றி பெரும்பான்மையாக உள்ளனர். அதிலும், பல இடங்களில் திமுக சார்பில் போட்டியிட்ட தம்பதியர் அதிகளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தேனி அல்லிநகரம் நகராட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட திமுக நகர பொறுப்பாளர் மற்றும் அவரது மனைவி வெற்றி பெற்றனர்.

தேனி அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி வார்டு தேர்தல் கடந்த 19ல் நடந்தது. இதில் திமுக சார்பில் நகர திமுக பொறுப்பாளர் பாலமுருகன் 20ம் வார்டிலும், அவரது மனைவி ரேணுப்பிரியா பாலமுருகன் 10ம் வார்டிலும் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் நடந்த வாக்கு எண்ணிக்கையில் இருவரும் வெற்றி பெற்றனர். ரேணுப்பிரியா பாலமுருகன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். அப்பதவியை ராஜினாமா செய்த அவர், வடபுதுப்பட்டியில் இருந்து தேனிக்கு குடிபெயர்ந்தார்.

இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை துறந்த அவர், தேனி நகராட்சி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தேனி நகர்மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுபோல் இந்த நகராட்சியில் அதிமுக சார்பில் 19ம் வார்டில் முன்னாள் கவுன்சிலர் ஆப்பிள் முருகன் என்ற சண்முகசுந்தரமும், அவரது மனைவி சரஸ்வதி 18ம் வார்டிலும் போட்டியிட்டனர். இதில் சரஸ்வதி மட்டும் வெற்றி பெற்றார்.அதேபோல், அமமுக சார்பில் 16ம் வார்டில் முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவரும், அமமுக நகர செயலாளருமான காசிமாயனும், அவரது மனைவி ஜெயா 17ம் வார்டிலும் போட்டியிட்டனர்.

இதில் ஜெயா மட்டும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தேமுதிக சார்பில் 4வது வார்டில் செல்வக்குமாரும், 5வது வார்டில் அவரது மனைவி வாசுகிதேவி போட்டியிட்டனர். இவர்கள் இருவரும் தேர்தலில் தோல்வியை சந்தித்தனர். திமுக சார்பில் போட்டியிட்ட தம்பதியர் வெற்றி பெற்றதை திமுகவினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tags : Allinagar ,Municipality ,Thimuka ,
× RELATED தேனி அல்லிநகரத்தில் மின்தடையை நீக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு