×

கோவை மாநகராட்சியில் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற திமுக வேட்பாளர் நிவேதா அதிமுக வேட்பாளர் உட்பட 17 பேர் டெபாசிட் காலி

கோவை, பிப். 24: கோவை மாநகராட்சியில் இளம்பெண் திமுக வேட்பாளர் நிவேதா மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் திமுக கூட்டணி கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 100 வார்டுகளில் 96 வார்டுகளை திமுக கூட்டணி வேட்பாளர்கள் கைப்பற்றினர். திமுக மட்டும் 73 வார்டுகளை அள்ளியது. 97வது வார்டில் இளம்பெண் திமுக வேட்பாளர் 22 வயதான நிவேதா போட்டியிட்டார்.
இவர் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் ஆவார்.

இவர் போட்டியிட்ட 97வது வார்டில் மொத்தம் 11,797 வாக்குகள் பதிவாகியிருந்தது. இதில், நிவேதா 8,925 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் உட்பட 17 பேரும் டெபாசிட் கூட பெற முடியாமல் பரிதாப தோல்வியை தழுவினர். அதிமுக வேட்பாளர் சகஸ்ரநாமம் 1139 வாக்குகள் மட்டுமே பெற்று 7,786 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். கோவை மாநகராட்சி வார்டுகளிலே மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் நிவேதா என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Coimbatore ,DMK ,Niveda AIADMK ,
× RELATED யூடியூபர் சங்கருக்கு மருத்துவ பரிசோதனை