×

ரங்கம் ஆர்டிஓ தலைமையில் ஆய்வு திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் பள்ளி மாணவர்களுக்காக பஸ் நிறுத்தம்

திருச்சி, பிப். 24: பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசு பஸ் மற்றும் பள்ளி பஸ்களில் அதிக மாணவர்களை ஏற்றி படிக்கட்டில் நின்றும், தொங்கி செல்வதை தடுக்க போக்குவரத்துத்துறை ஆணையர் மற்றும் துணை ஆணையர் உத்தரவின் பேரில் திருச்சியில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை மேலகொண்டையம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளி முடிந்து மாலை நேரங்களில் வீட்டுக்கு செல்வதற்காக சாலையில் அபாயகரமான முறையில் நின்று கொண்டு சாலையை கடந்து சென்று வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த ரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் தலைமையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி கோட்ட மேலாளர் சுரேஷ் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் அங்கு சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவ்வழியே வந்த அரசு மற்றும் தனியார் பஸ் படியில் நின்றும், தொங்கி கொண்டு சென்ற பள்ளி மாணவர்களிடம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், மாணவர்களுக்கு பஸ் நிறுத்தம் இல்லாததால் பஸ்களை நிறுத்தாமல் செல்வதை அறிந்து உடனடியாக அந்த பகுதியில் பஸ் நின்று செல்ல உத்தரவிடப்பட்டது. மேலும், பஸ்கள் நின்று செல்லும் வகையில் தகவல் பலகை வைக்கவும் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார், அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளருக்கு பரிந்துரைத்தார். இதனை ஏற்ற கோட்ட மேலாளர் சுரேஷ், உடனடியாக தகவல் பலகை வைக்கவும், அவ்வழியே சென்ற அரசு பஸ்களை நிறுத்தி, பள்ளி முடிந்த வேளையில் மாணவர்களுக்காக பஸ்சை நிறுத்தி ஏற்றி செல்லவும் உத்தரவிட்டார். மேலும் பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களிடம் மாணவர்களை படிக்கட்டில் நின்று பயணம் செய்ய அனுமதிக்க கூடாது எனவும் அறிவுரை வழங்கினர்.

Tags : Aurangam ,Trichy-Chennai highway ,
× RELATED ஆனிவார ஆஸ்தான வரவு, செலவு கணக்குகள்...