×

அரவக்குறிச்சி ஒன்றியத்தில் கோடைகாலம் துவங்கிய நிலையில் குடிநீர் வறட்சியை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அரவக்குறிச்சி. பிப்.24: அரவக்குறிச்சி ஒன்றியத்தில் கொடையூர், நாகம்பள்ளி,வெஞ்சமாங்கூடலூர், புங்கம்பாடி, ஈசநத்தம், அம்மாபட்டி, எருமார்பட்டி, சாந்தப்பாடி, கோவிலூர் உள்ளிட்ட 20ஊராட்சிகளும், அரவக்குறிச்சி பேரூராட்சி, பள்ளபட்டி நகராட்சி ஆகியவை உள்ளது. வெயிலின் தாக்கத்தினால் பல நாட்களாக கடும் வெப்பம் நிலவி வறட்சியின் காரணமாக ஆழ்துளை கிணறுகள் மற்றும் விவசாய கிணறுகள் அனைத்தும் வற்றி விட்டன. இதனால் வீடுகளில் உள்ள ஆழ்குழாய் நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு போய் விட்டது. குறைந்த அளவே வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. அதுவும் போதுமான அளவு இல்லாத நிலை இருந்தது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு திண்டாடினர்.
பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் 20 முதல் 30 நாட்களுக்கு ஒரு தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் தண்ணீருக்கு தவித்து வந்தனர். பொதுமக்கள் குடிநீர் விலைக்கு வாங்கி குடிக்க வேண்டிய அவலமான நிலை ஏற்பட்டது.

இப்போதே விவசாயக் கிணறுகள், வீடுகளின் ஆழ்குழாய் கிணறுகள், போர்வெல்கள் போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் குறையத் தொடங்கியுள்ளது. இதனால் பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் நீராதாரங்களை மேம்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருக்களில் உள்ள பிளாஸ்டிக் தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பும் ஆழ்குழாய் கிணறுகளின் ஆழத்தை அதிகப்படுத்தியும், அதிலுள்ள பைப்புகளின் நீளத்தை அதிகப்படுத்தியும், பழுதடைந்த மின்மோட்டர்களை சரி செய்தும், புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தும் பொதுமக்களுக்கு தடையில்லாமல் வரும் கோடையில் போதுமான தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீராதாரங்களை கண்காணித்து மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Aravakurichi Union ,
× RELATED அரவக்குறிச்சி ஒன்றியத்தில் பசு, எருமையை தாக்கும் புரூசெல்லோசிஸ் நோய்