×

இன்று வாக்கு எண்ணிக்கை கடலூர் மாநகராட்சியில் வேட்பாளருடன் 4 முகவர்களுக்கு மட்டுமே அனுமதி

கடலூர், பிப். 22:  கடலூர் மாவட்டத்தில் கடந்த 19ம் தேதி ஒரு மாநகராட்சி, 6 நகராட்சி மற்றும் 14 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இதனையொட்டி கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குப் பெட்டி இயந்திரங்கள் பாதுகாப்பாக வாகனங்களில் கொண்டு சென்று கடலூர் புனித வளனார் பள்ளி மற்றும் அந்தந்த நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி மற்றும் அனைத்து வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் போடப்பட்டு, 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

 இன்று (22ம்தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை யொட்டி அந்தந்த வேட்பாளர்கள் தங்களது முகவர்கள் விபரம் குறித்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தெரியப்படுத்தினர். மேலும் உரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அடையாள அட்டைகளை பெற்றுச் சென்றுள்ளனர். கடலூர் மாநகராட்சியில் நடைபெறும் வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர் மற்றும் அவருடன் ஒரு முகவர் மட்டும் அனுமதி அளித்திருந்தனர். தற்போது இதிலிருந்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தில் ஒரு வேட்பாளருடன் அந்த வார்டுகளில் எத்தனை வாக்குச்சாவடி மையம் இருக்கிறதோ, அந்த வாக்குச் சாவடி மையத்தை கணக்கில் கொண்டு ஒவ்வொரு முகவர் அடிப்படையில் வேட்பாளருடன் 4 முகவர்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து இப்பணியில் வேட்பாளர்கள் தங்களுக்கான முகவர்கள் உடன் அழைத்து செல்வதற்கு மாநகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு திரண்டிருந்தனர். கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட வாக்கு மையத்தில் ஒவ்வொரு முறையும் 3 வேட்பாளர்கள் அனுமதித்து அவர்களுக்கான வாக்கு எண்ணிக்கை முடித்து உரிய சான்றிதழ் வழங்கிய பின்பு அவர்கள் வெளியில் வர வேண்டும்.  அதன் பிறகு அடுத்தடுத்து 3 வேட்பாளர்கள் அனுமதித்து அவர்களுடன் 4 முகவர்கள் உடன் செல்ல வேண்டும். இதுபோன்ற நிலைப்பாட்டுடன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்பும் சம்பந்தப்பட்ட கடலூர் மாவட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படுகிறது.

Tags : Kadalur Municipality ,
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்