×

மயானம் அமைத்து தரக்கோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி, பிப்.22: மயானம் அமைத்து தரக்கோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விளாத்திகுளம் வட்டம் மெட்டில்பட்டி கிராமத்தில் அருந்ததியர் மக்கள் தனி மயானம் அமைத்து தரக்கோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழ்ப்புலிகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் வீரபெருமாள் தலைமை வகித்தார். புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்பாண்டி, மாவட்ட துணைச்செயலாளர் பீமாராவ், மாவட்ட இளம் புலிகள் அணி செயலாளர் தமிழரசு, ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் பாண்டி, ஜெய்பீம் தொழிலாளர் நலச்சங்க தலைவர் செண்பகராஜ், தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் கனியமுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்ட அவர்கள், கோட்டாட்சியர் சங்கரநாராயணனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மெட்டில்பட்டி கிராமத்தில் வசித்து வரும் நாங்கள் 4,5 தலைமுறைகளாக மயானம் இன்றி வெட்ட வெளியில் இறந்தவர்களின் உடல்களை எரியூட்டி வருகிறோம். எனவே மயானம் அமைத்து தரக்கோரி மனுக்கள் கொடுத்தோம். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை. எனவே உடனடியாக மயானம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். முற்றுகை போராட்டத்தில் மெட்டில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன், கர்ணன், பரமன், சின்ன பரமன், கருத்தப்பாண்டி, காளீஸ்வரன், பாண்டி, சின்னதம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kovilpatti Kottachiyar ,
× RELATED திருச்சி மாவட்டத்தில் 13 மையங்களில் 8,283...