செஞ்சேரி கிராமத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி

பெரம்பலூர்,பிப்.22: செஞ்சேரி கிராமத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடந்தது. இதில் 10 மகளிர் சுயஉதவிக் குழுவினர் உற்பத்தி பொருட்களைக் காட்சிப்படுத்தி இருந்தனர். ஊராட்சிகளில் வாழும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர் ஆகியோர் போதிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு இல்லாமல் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர். இவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் கூடுகை மற்றும் கூட்டாண்மை பிரிவின்கீழ் உணவு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணவு போட்டிகள் வட்டாரஅளவில் நடத்திட அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி செஞ்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர்நல மாணவர் விடுதி அருகேயுள்ள ஆலம்பாடி ஊராட்சி இ-சேவை மைய வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் சுதா தலைமை வகித்தார். செஞ்சேரி ஊராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிவேல் முன்னிலை வகித்தார். ஆலம்பாடி ஊராட்சி தலைவர் கல்பனா சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டியை தொடங்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர்கள் ராஜகுமாரி, ரமேஷ், சரோஜா ஆகியோர் மகளிர் சுயஉதவிக் குழுவினரை ஒருங்கிணைத்து போட்டிகளை நடத்தினர்.

இதில் பெரம்பலூர் வட்டாரஅளவில் பல்வேறு கிராமங்களில் இருந்து மலர், செண்பகம், வேலுநாச்சியார், தமிழ், அம்பிகை, நீலியம்மன், முருகன், தென்றல் உள்ளிட்ட 10 மகளிர் சுயஉதவிக் குழுவினர் சிறுதானியங்களில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஊட்டச்சத்து உணவு வகைகளை தயாரித்து கண்காட்சியில் இடம் பெற செய்தனர். இந்தக் கண்காட்சியை பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர். இந்த போட் டியில் சிறந்த 3 குழுக்கள் தேர்வுசெய்யப்பட்டு, மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மாவட்ட அளவில் சிறந்த குழுவினருக்கு பரிசுகள் வழங்கப்படும்.

Related Stories: