நாமக்கல், பிப்.22: உலக தாய்மொழி தினத்தையொட்டி, தமிழ் மொழியை பாதுகாக்க வலியுறுத்தி நாமக்கல்லில் நடைபயணம் நடைபெற்றது. நாமக்கல்லில், உலக தாய்மொழி தினத்தையொட்டி தமிழ் மொழியை பாதுகாக்க வலியுறுத்தி நடைபயணம் நடைபெற்றது. அகிம்ஷா சோசியலிஸ்ட் கட்சியின் தலைவர் காந்தியவாதி ரமேஷ் தலைமை வகித்து பேசினார். நாமக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் நினைவுதூண் அருகில் இருந்து துவங்கிய நடைபயணம் கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது.
இதில் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் ஸ்ரேயாச சிங்கிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகம், பொதுமக்களுக்கு தெரியாத அளவுக்கு பின்புற கட்டிடத்தில் அமைந்துள்ளது. எனவே, அதனை முன்புற கட்டிடத்தில் தரைதளத்தில் மாற்றி அமைக்க வேண்டும். சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய நூல்கள், தமிழ் வரலாற்று நூல்களை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி ஏற்படுத்த வேண்டும் என கூறியிருந்தனர்.