×

(தி.மலை) முதுகில் அலகு குத்தி கிரேனில் தொங்கியபடி பக்தர்கள் நேர்த்திக்கடன் ஆரணி அருகே கூழ்வார்க்கும் திருவிழா

ஆரணி, பிப்.22: ஆரணி அருகே கூழ்வார்க்கும் திருவிழாவையொட்டி பக்தர்கள் முதுகில் அலகு குத்தி கிரேனில் தொங்கியபடி முத்துமாரியம்மன்னுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆரணி அடுத்த எஸ்.வி.நகரத்தில் உள்ள பழமையான முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் திருவிழாவையொட்டி, கடந்த 14ம் தேதி பக்தர்களுக்கு காப்பு கட்டி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை, பகலில் பல்லக்கு மற்றும் இரவு பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதியுலா வந்து பக்கதர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

தொடர்ந்து கூழ்வார்க்கும் திருவிழா இன்று நடக்க உள்ளது. இதையொட்டி, நேற்று காலை முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் பவனி வந்தார். அப்போது காப்பு கட்டிய பக்தர்கள் உடலில் எலுமிச்சை பழங்கள் மற்றும் அலகு குத்திக்கொண்டு கிரேனில் தொங்கியபடி பறந்து வந்து அம்மனுக்கு மாலை அணிவித்தும், குழந்தைகளை தூக்கிச் சென்று அம்மனின் ஆசி பெற்றும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத்தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட முத்துமாரியம்மன் முக்கிய விதிகள் வழியாக இரவு திருவிதி உலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இன்று கூழ்வார்க்கும் திருவிழாவும், நாளை தேர்திருவிழாவும் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags : T.Malai ,Nerthikkadan Arani ,
× RELATED (தி.மலை) எருது விடும் விழாவில்...