மன்னார்குடி நகராட்சி 31வது வார்டு திமுக வேட்பாளர் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பு

மன்னார்குடி, பிப்.18: மன்னார்குடி நகராட்சி 31 வது வார்டில் திமுக வேட்பாளர் ஆசியா பேகம் ஹாஜாமொய்தீன் நேற்று மாலை தனக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்களுடன் இரு சக்கர வாகன பேரணியாக சென்று இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வழியெங்கும் அவருக்கு பொதுமக்கள் மாலைகள் அணிவித்து மலர்கள் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.அப்போது வேட்பாளர் ஆசியாபேகம் ஹாஜாமொய்தீன் வாக்காளர் மத்தியில் பேசுகையில், அறநிலையத் துறையால் விதிக்கப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கான அதிகபட்ச வரியை குறைக்க எம்எல்ஏ டிஆர்பி ராஜா மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். வார்டில் தனி ரேஷன் கடை அமைத்து தரப்படும். வார்டில் உள்ள அனைத்து வடிகால்களை சீரமைக்கப்பட்டு தேவையான இடங்களில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு சாலைகளில் மழைநீர் தேங்காமல் அருகில் உள்ள குளங்களுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். காட்டு நாயக்கன் குடியிருப்பில் பழுதடைந்துள்ள வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டு துப்புரவு பணியாளர்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்றார்.வேட்பாளருடன், மனித உரிமைப்பிரிவு மாவட்ட அரசு வழக்கறிஞர் கலைவாணன், வட்ட செயலாளர் தேவசாமிதாஸ், மேற்கு ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் கோவி அன்பழகன், வார்டு பிரதிநிதி அசோக், திமுக நிர்வாகிகள் ஆர்வி ஆனந்த், மகேந்திரன், கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: