திருவில்லிபுத்தூருக்கு விரைவில் தாமிரபரணி குடிநீர் வழங்க நடவடிக்கை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு

திருவில்லிபுத்தூர், பிப். 17: திருவில்லிபுத்தூரில் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை கம்மாபட்டி, தெற்கு ரதவீதி, அய்யம்பட்டி, சக்கரை குளத்தெரு ஆகிய பகுதிகளில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வாக்குசேகரித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், திருவில்லிபுத்தூர் நகருக்கு தற்போது தாமிரபரணி மற்றும் செண்பகத்தோப்பு தண்ணீரை ஒழுங்காக  வழங்கவில்லை. ஆனால் திருவில்லிபுத்தூருக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. நான் தான் இத்திட்டத்தை திருவில்லிபுத்தூரில் துவக்கி வைத்தேன். ஆனால்,  விருதுநகர் மாவட்டத்திலேயே மிகவும் மோசமான நிலையில் திருவில்லிபுத்தூர் நகராட்சி உள்ளது. இந்த பகுதியில் பத்து வருடமாக அதிமுக எம்எல்ஏ இருந்துள்ளார். அதிமுக சேர்மன் இருந்துள்ளார். ஆனால், அவர்கள் தாமிரபரணி தண்ணீரை கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்தால் திருவில்லிபுத்தூருக்கு தினசரி தாமிரபரணி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  ஏற்கனவே தமிழக அரசு மகளிருக்கு இலவச பஸ் பயணம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. விரைவில் தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வருகிற எம்பி எலெக்சனில் ஓட்டு கேட்க வரும்முன் திருவில்லிபுத்தூர் பகுதிக்கு தினமும் தாமிரபரணி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர் ஆகிய பகுதிகளுக்கு இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருவில்லிபுத்தூரில் அந்த திட்டத்தை நிறைவேற்றுவது எனது வேலை. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: