×

காரியாபட்டி, மல்லாங்கிணற்றில் உள்ள பதற்ற வாக்குச்சாவடிகளை மதுரை சரக டிஐஜி ஆய்வு

காரியாபட்டி,பிப். 17:  காரியாபட்டி, மல்லாங்கிணறு பேருராட்சிகளில் அடையாளம் காணப்பட்டுள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணிக்கை மையம் ஆகியவற்றை  மதுரை சரக காவல்துறை துணைத்தலைவர் பொன்னி நேற்று ஆய்வு ெசய்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை  பலப்படுத்த அவர் அறிவுறுத்தினார். நகர்ப்புற உள்ளாட்சி தோ்தலையொட்டி  காரியாபட்டி மல்லாங்கிணறு பேரூராட்சிகளில்  வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 15 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சி பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில்
மதுரை சரக காவல்துறை துணைத்தலைவர் பொன்னி ஆய்வு மேற்கொண்டார். பெண்கள் அரசு நடுநிலைப்பள்ளி, அமலா உயர்நிலைப்பள்ளி, மல்லாங்கிணற்றில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வாக்கு எண்ணிக்கை மையம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிட்ட அவர், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு காமிரா பொருத்துவதற்கான வசதிகள் செய்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பாதுகாப்பு குறித்து முன்கூட்டியே ஆய்வு செய்து கொள்ள வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை போலீசாருக்கு அறிவுறுத்தினார். இதுகுறித்து டிஐஜி பொன்னி கூறுகையில், ` இப்பகுதியில் கடந்த தோ்தலின்போது பெரிய அளவில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. எனினும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி 15 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கணிக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெப்காமிரா வசதியும் செய்யப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
அருப்புக்கோட்டை டிஎஸ்பி சகாயஜோஸ், இன்ஸ்பெக்டர் மூக்கன், எஸ்ஐ திருமலைக்குமார், பிச்சைபாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Madurai Freight DIG ,Kariyapatti ,Mallankinar ,
× RELATED நீரில் மூழ்கி பள்ளி மாணவர் பலி