×

கர்நாடகா வாலிபர் கொலையில் திடீர் திருப்பம் வேலைக்கு செல்லாமல் திருட்டு வேலையில் ஈடுபட்டதால் கொன்றேன்: பாசக்கார மாமனார் பரபரப்பு வாக்குமூலம்

திருக்கழுக்குன்றம்: கர்நாடகா வாலிபர் கொலை வழக்கில், வேலைக்கு செல்லாமல் திருட்டு வேலைகளில் ஈடுபட்டதால், அசிங்கப்பட்ட நான், மருமகனை அடித்து கொன்றேன் என பாசக்கார மாமனார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கர்நாடகா மாநிலம் பெல்காம் மாவட்டத்தை சேர்ந்தவர் மக்புல் (25). கல்பாக்கம் அடுத்த நரசங்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (53). அணு மின் நிலைய ஊழியர். இவரது மனைவி இந்திரா. இவர்களது மகள் நிஷாந்தி (22). இவருக்கும், மக்புலுக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 8 மாதத்துக்கு முன்பு மக்புல், நிஷாந்தியை கர்நாடகாவுக்கு அழைத்து சென்று, திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து ராஜேந்திரன், மகள் மற்றும் மருமகனை, கல்பாக்கம் வரவழைத்தார். அவர்களை, அணுபுரத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட ஊழியர் குடியிருப்பில் தங்க வைத்தார். அப்போது, மக்புல் வேலை இல்லாமல் இருந்தார்.

இந்தவேளையில் கடந்த 5 நாட்களுக்கு முன் நிஷாந்தியின் தாய் இந்திராவுக்கு உடல்நிலை பாதித்தது. இதனால் அவர், கல்பாக்கத்தில் உள்ள அணுசக்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை, நிஷாந்தி உடன் இருந்து பார்த்து கொண்டார். அப்போது, மக்புல், நரசங்குப்பத்தில் உள்ள ராஜேந்திரன் வீட்டில் தங்கினார்.நேற்று முன்தினம் மாலை மக்புல் தங்கிய வீட்டில் இருந்து திடீரென புகை வந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, தலை மற்றும் கை ஆகிய பகுதிகளில் வெட்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் எரிந்த நிலையில் மக்புல் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.புகாரின்படி சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், நிஷாந்தியின் தந்தை ராஜேந்திரன், மக்புலை கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவரை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று தீவிரமாக விசாரித்தனர்.

அதில், எனது மகளை மக்புல் பேஸ்புக் மூலம் காதலித்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். அவருக்கு வேலை இல்லாததால் கர்நாடகவில் எனது மகள் மிகவும் வறுமையில் வாழ்ந்தாள். இதை எனது மகள் என்னிடம் தெரிவித்ததால், நானும் அவர்களை இங்கு வரவழைத்து, எனக்கு வழங்கப்பட்ட அணுமின் நிலைய குடியிருப்பில் தங்க வைத்தேன். ஆனால், அப்போதும் மக்புல் வேலைக்கு செல்லாமல் பல்வேறு இடங்களில்  திருட ஆரம்பித்தார். இது சம்பந்தமாக இங்குள்ள பலர் என்னிடம் கூறியபோது எனக்கு அவமானம் ஏற்பட்டது. இதையடுத்து நான் பலமுறை, மக்புலுக்கு அறிவுரை கூறினேன். ஆனால் அவர், அதை கேட்கவில்லை. இதனால் நான் மிகவும் மன உலைச்சலுக்கு ஆளானேன். நேற்று முன்தினம் நரசங்குப்பத்தில் உள்ள எனக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் தங்கிய மக்புலை பார்க்க சென்றேன். அப்போது அங்கிருந்த மக்புலை, சுத்தியலால் அடித்து, அரிவாள் மனையால் வெட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றேன் என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கதறி அழுது நாடகம்
மக்புல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்ததும், போலீசாரும், அப்பகுதி பொதுமக்களும் அங்கு திரண்டனர். அப்போது அங்கு வந்த ராஜேந்திரன் ‘‘அய்யயோ என் மருமகனை யாரோ கொன்று விட்டார்களே’’ என போலீசார் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கதறி அழுதார். ஆனால், கடைசியில் அவரே கொலை செய்து விட்டு நாடகமாடியது, போலீசாரின் கிடுக்கிபிடி விசாரணையில் அம்பலமானது.

Tags : Karnataka ,Pasakkara ,
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...