×

வரலாற்று சிறப்பு மிக்க காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் வெற்றி வாகை சூடப்போகும் பெண் தலைவர் யார்?

காவேரிப்பட்டணம், பிப். 17: வரலாற்று சிறப்பு வாய்ந்த காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் 10ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிவாகை சூடப்போகும் பெண் தலைவர் யார்? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க பேரூராட்சிகளில் ஒன்றாக திகழ்வது காவேரிப்பட்டணம். இங்கு இயற்கை அரண் இல்லாத தரைக்கோட்டை ஒன்று இருந்தது. தற்போது கோட்டை இருந்த பகுதி அழிவுற்று அகழி மட்டும் தென்படுகிறது.  கோட்டையில் இருந்த பெருமாள் கோயிலும், சிவன் கோயிலும் இன்றும் பேரூராட்சியின் அரண்களாக உள்ளன. ஹைதர்அலி, திப்புசுல்தானுடன் ஆங்கிலேயர் தொடுத்த போரில் இந்த கோட்டை முக்கியத்துவம் பெற்றதாக இருந்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பன்னிரென்டு கோட்டைகளை உள்ளடக்கிய பகுதியே பாராமஹால் என்று ஆங்கிலேயர் காலத்தில் அழைக்கப்பட்டது. அந்த 12 கோட்டைகளில் காவேரிப்பட்டணம் கோட்டையும் ஒன்று என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

14ம்நூற்றாண்டில் கட்டப்பட்ட நகரேஸ்வரர் கோயில், இந்த பேரூராட்சியின் பிரதான அடையாளமாக திகழ்கிறது. மதுரையில் கோவலனை பாண்டியன் சிரம் அறுத்தான். இதனால் வெகுண்டெழுந்த கண்ணகி மதுரையை எரித்தாள். இதனால் பாண்டிய வம்சத்தினரின் கோபத்துக்கு ஆளாகக்கூடாது என்று கருதிய காவிரிப்பூம்பட்டினத்தின் வணிகர்கள், இந்த பகுதியில் வந்து குடியேறினர். அப்படி அவர்கள் வந்து குடியமர்ந்த பகுதி என்பதால் காவேரிப்பட்டணம் என்று அழைக்கப்படுவதாக பெயர்காரணம் கூறப்படுகிறது. இப்படி பல்வேறு பெருமைகள் சூழ்ந்த காவேரிப்பட்டணம், பல்வேறு நிலைகளை கடந்து தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய பேரூராட்சிகளில் ஒன்றாக திகழ்கிறது. 1886ம் ஆண்டிலேயே கிராமநிர்ணயசபையாக இருந்தது காவேரிப்பட்டணம். இதன்பிறகு 1986ம் ஆண்டு வாக்கில் பேரூராட்சியாக தரம் உயர்ந்தது. ரங்கனாச்சாரி, சேஷையாஅய்யர், நாகராஜமணேகர், பச்சையப்பசெட்டியார், சின்னசாமி செட்டியார், டாக்டர் கிருஷ்ணன், விவேகானந்தன் என்று பலர் கிராமநிர்ணய சபைக்கும், பேரூராட்சிக்கும் தலைவர்களாக இருந்து பெருமை சேர்த்துள்ளனர்.

கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு இந்த பேரூராட்சி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது. அதிமுக சார்பில் போட்டியிட்ட வாசுதேவன் நகராட்சி தலைவராக தேர்வு பெற்றார். அப்போது பேரூராட்சியின் தேவைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் மக்கள் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. இதற்கடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும், பல்வேறு காரணங்களால் நடக்காமல் போனது துரதிஷ்டம். இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி நிற்கிறது காவேரிப்பட்டணம் பேரூராட்சி.

காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் மொத்தம்  15 வார்டுகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள்   6,486 பேரும்,பெண் வாக்காளர்கள்  7,142 பேரும், இதரர் 2 பேரும் என்று மொத்தம் 13,570 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களின் வாக்குகளை கருத்தில் கொண்டு திமுககூட்டணி,அதிமுக, அமமுக, பாமக,  தேமுதிக  போன்ற அரசியல் கட்சிகளோடு சுயேட்சைகளும் களத்தில் உள்ளனர். பெண் வாக்காளர் அதிகமுள்ள இந்த பேரூராட்சி தலைவர் பதவி தற்போது  பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் வாக்குகளை குறிவைத்தும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் பத்தாண்டு கால எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் ஆழ்த்தியதால் இந்த முறை வார்டு உறுப்பினர்களை கவனமாக தேர்வு  செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர் காவேரிப்பட்டணம் பேரூராட்சி மக்கள்.

இது குறித்து காவேரிப்பட்டணம் பேரூராட்சி பொதுமக்கள் கூறியதாவது: காவேரிப்பட்டினம் நகர் வணிகர்கள் நிறைந்த பகுதி. இப்பகுதியை சுற்றி சுமார் 60 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை உள்ளடக்கிய 15 வார்டுகளிலும் உள்ள சாலைகள் அனைத்துமே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இது வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாத நிலையை ஏற்படுத்தி, அடிக்கடி போக்குவரத்து  நெரிசலுக்கும் வழிவகுக்கிறது. எனவே சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி சாலைகளை அகலப்படுத்த வேண்டும். சக்தி விநாயகர் கோவில் அருகில் நான்கு வழிப் பிரிவுகள் செல்வதால் அங்கு ரவுண்டானா அமைக்க வேண்டும். சேலம் ரோட்டில் அமைந்துள்ள சக்தி விநாயகர் ஆலயத்தின் அருகில் மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கி அடைத்து, அப்படியே நிற்கிறது. இது பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது.

கழிவுநீர் செல்ல பாதாள சாக்கடை அமைக்க வேண்டும். நகரப்பகுதியில் திருட்டு, வழிப்பறி, நடக்காமல் இருக்க அனைத்து வார்டுகளிலும் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும். வாகனம் செல்ல ஒரு புறமும் வருவதற்கு ஒரு புறமும் என அமைத்து அதற்கு தகுந்தார் போல் அனைத்து இடங்களிலும் சாலை அமைக்க வேண்டும். மேலும் தெருக்களில் சேரும் குப்பைகளை, தினந்தோறும் தூய்மைப்படுத்த வேண்டும். சாக்கடைகளில் தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதெல்லாம் பல்லாண்டு கால கோரிக்கையாக உள்ளது. ஆனால் இவை எதுவுமே நிறைவேறவில்லை. எனவே இந்த முறை வாக்குறுதிகளை நிறைவேற்றும் வல்லமை படைத்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவரும், துணைத்தலைவரும் பேரூராட்சியை திறம்பட வழிநடத்துவார்கள் என்பதை நம்பிக்கையாக  கொண்டுள்ளோம்.
இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

Tags : Kaveripattinam ,
× RELATED காவேரிப்பட்டினம் அருகே தபால் வாக்களித்த 101-வயது மூதாட்டி