×

கோவை மாநகராட்சி 8-வது வார்டு திமுக வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பிரசாரம்

பீளமேடு, பிப். 15:  கோவை மாநகராட்சி 8-வது வார்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர்  க.விஜயகுமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று 8-வது வார்டுக்கு உட்பட்ட காளப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் திறந்தவேனில் சென்று பிரசாரம் செய்தார். அப்போது, வேட்பாளர் விஜயகுமார், அமைச்சருக்கு வீரவாள் பரிசு வழங்கினார். பிரசாரத்தின்போது, அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது: இந்த வார்டில் போட்டியிடும் வேட்பாளர் க.விஜயகுமார், மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகள் வித்தியாசமாக உள்ளன. இந்த வார்டை  முன்மாதிரியாக மாற்றும் வகையில் வாக்குறுதி அளித்துள்ளார். வார்டு மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உங்களுக்காக உழைக்க களம் காணும் திமுக வேட்பாளர் விஜயகுமாருக்கு  உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.

வேட்பாளர் க.விஜயகுமார் பேசியதாவது: 8-வது வார்டுக்கு உட்பட்ட வீடுகளில் இருந்து பெறப்படும் குப்பைகள் அனைத்தும் முறையாக சேகரிக்கப்பட்டு குப்பை இல்லாத சுகாதாரமான வார்டாக மாற்றிக்காட்டுவேன். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வாரச்சந்தைகள் அமைப்பதற்கான இடம் புதிதாக ஏற்படுத்தப்பட்டு, அனைவரும் எளிதில் பயனடையும்  வகையில் வாரச்சந்தைகள் அமைத்து தரப்படும். வார்டில் உள்ள குட்டைகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு, தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகை செய்வேன்.

10 மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை பெற்றுத்தரப்படும். இந்த வார்டில் உள்ள மக்கள் அனைவரும் தங்களது குறைகளை சொல்வதற்காக  24 மணி நேரமும் செயல்படக்கூடிய பிரத்யேகமான அவசர தொலைபேசி எண் உருவாக்கப்பட்டு, எனது  நேரடி கண்காணிப்பில் இயக்கப்படும். வார்டில் மக்கள் சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, பயனாளிகளுக்கு அரசு சார்ந்த உதவிகள், அரசு ஆவணங்கள் பெறுதல் மற்றும் சீரமைத்தல், அரசு வேலைவாய்ப்பு  மையத்தில் பதிவுசெய்தல், அரசின் திருமண உதவித்தொகை, கர்ப்பிணி பெண்களுக்கான நிதியுதவி, திருமண உதவித்தொகை, அரசு காப்பீட்டு திட்டங்கள் என அரசின் திட்டங்கள் அனைத்தையும் பெற்றுத்தருவேன். வார்டில் உள்ள பிரதான சாலைகள் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, காவல் துறையுடன் இணைந்து  திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்கள் தடுக்கப்படும். இவ்வாறு வேட்பாளர் க.விஜயகுமார் பேசினார். பிரசாரத்தில், கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா கவுண்டர் என்கிற கிருஷ்ணன், மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் ரகுபதி, வார்டு செயலாளர் சுரேஷ், நேருநகர்  தேவராஜ், நேருநகர் மனோகரன், ஜி.கே.டி. நகர் பரமசிவம், காளப்பட்டி சுகுமார் மற்றும் கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags : Minister ,Senthilpalaji ,Coimbatore Corporation 8th Ward DMK ,Vijayakumar ,
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...