×

24வது மாதமாக பவுர்ணமி கிரிவலம் செல்ல மீண்டும் தடை கலெக்டர் அறிவிப்பு திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை, பிப். 15:கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருவண்ணாமலையில் 24வது மாதமாக பவுர்ணமி கிரிவலம் செல்ல இந்த மாதமும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் தீபமலையை சுற்றிலும் பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவது வழக்கம். ஆனால், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 23 மாதங்களாக பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் கார்த்திகை தீபத்தையொட்டி ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில் 24வது மாதமாக பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் செல்வார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 20 மாதங்களுக்கும் மேலாக பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில். மாசி மாத பவுர்ணமி இன்று(15ம் ேததி) இரவு 10.30 மணிக்கு தொடங்கி நாளை(16ம் ேததி) இரவு 11.30 மணிக்கு நிறைவடைகிறது. ஆனால் இந்த மாதமும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் இந்த மாதமும் பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரவேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.மேலும், மாவட்ட நிர்வாகத்தின் நோய் தொற்று பரவலை தடுக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய உதவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Collector ,Pavurnami Kiriwalam ,Thiruvannamalai ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...