×

நபார்டு வங்கி உதவியுடன் ரூ.21 கோடி மதிப்பில் முதுகுளத்தூரில் புறவழிச்சாலைக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

சாயல்குடி, பிப். 11:   முதுகுளத்தூர்  தொகுதி எம்எல்ஏ, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முதுகுளத்தூர்  பேரூராட்சியில் போட்டியிடக்கூடிய திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘பரமக்குடி, கமுதி,  கடலாடி, சாயல்குடி, ராமநாதபுரம் சாலையில் முதுகுளத்தூர் பேரூராட்சி  அமைந்துள்ளதால் போக்குவரத்து மிகுந்த நகரமாக விளங்கி வருகிறது. கமுதி,  கடலாடி, முதுகுளத்தூர் ஆகிய 3 தாலுகாக்களை சேர்ந்த பொதுமக்கள்,  வெளிமாவட்ட-  மாநிலத்தவர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வந்து  செல்கின்றனர்.

இந்நிலையில் முதுகுளத்தூரிலிருந்து கடலாடி  செல்லும் சாலையான மறவர்தெருவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறுகலான இச்சாலையில் ஒரு வாகனம்  வந்து செல்லும் போது மற்றொரு வாகனம் செல்ல முடியாத சூழ்நிலையால்,  வாகனங்கள் அணிவகித்து நிற்பதால் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி  மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டு வருகிறது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய சுற்றுச்சாலை  அமைக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தற்போது நபார்டு  வங்கி உதவியுடன் ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, நிர்வாக அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இச்சாலை  அமைக்கப்படுவதன் மூலம் சுமார் 50 ஆண்டு கால போக்குவரத்து நெரிசல்  குறைக்கப்பட உள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்னை  தீர்க்கப்பட்டுள்ளது. முதுகுளத்தூர் பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு  முகாம் நடத்தப்பட்டது. புதிய நூற்பாலை அமைக்கப்பட்டவுடன் பெண்கள்,  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். முதுகுளத்தூரில் அனைத்து  தெருக்களிலும் சாலை வசதி அமைப்பதுடன், கழிவுநீர் புதிய தொழில்நுட்ப  வசதியுடன் சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மருத்துவமனை தரம்  மேம்படுத்தப்படும்’ என்றார்.

இதில் முன்னாள் எம்எல்ஏ முருகவேல், ஒன்றிய செயலாளர்கள் பூபதிமணி, ஜெயபால், ஒன்றிய பொறுப்பாளர்கள் சண்முகம், ஆப்பனூர்  ஆறுமுகவேல், திமுக வேட்பாளர்கள் மோகன்தாஸ், சதீஸ், ஒன்றிய கவுன்சிலர்  நாகஜோதி ராமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Mudukulathur ,NABARD ,Minister ,Rajakannappan ,
× RELATED கடலாடி, முதுகுளத்தூர் கிராமங்களில்...