×

போக்குவரத்து வசதியின்றி தவித்த பழங்குடி மக்களுக்கு சொந்த செலவில் ஆட்டோ எஸ்பி வருண்குமார் வழங்கினார்

திருத்தணி: தாடூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகத்சிங் நகரில் உள்ள பழங்குடியினருக்கு தினகரன் செய்தி எதிரொலியாக திருவள்ளூர்  மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் தனது சொந்த செலவில் ஆட்டோவை வழங்கினார்.  திருத்தணி அருகே தாடூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகத்சிங் நகரில் உள்ள பழங்குடியினர் குடியிருப்பில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் சா.மு.நாசர், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி, சந்திரன் எம்எல்ஏ, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்தியா ஆகியோர் வீட்டுமனை பட்டாக்களை வழங்கினர்.

இதற்கிடையில், இப்பகுதியில் சாலை வசதி, மின் விளக்கு வசதி கிடையாது. தனியார் அமைத்து கொடுத்த சோலார் மின்விளக்கை மட்டுமே இரவு நேரங்களில் பயன்படுத்தி வந்தனர். அத்தியாவசிய தேவைகள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல போக்குவரத்து வாகனங்கள் இன்றி அவதிப்பட்டனர். மேலும் குடிசை வீடுகளை அகற்றிவிட்டு தங்களுக்கு கான்கிரிட் வீடுகள் கட்டி தரவும் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து  ஜனவரி 31ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதையறிந்த மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் தானாக முன்வந்து அந்த பழங்குடியின மாணவர்கள் பள்ளி சென்றுவரவும், அப்பகுதி மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் நேற்று முன்தினம் மாலை தனது சொந்த செலவில் ஆட்டோவை புதுப்பித்து இலவசமாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஏஎஸ்பி சாய் பிரணீத், தனிப்பிரிவு எஸ்ஐ சந்திரசேகர், சிறப்பு தனிப்பிரிவு எஸ்ஜ பிரகாஷ், நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும்,  அப்பகுதி மக்கள் கூறுகையில், `தமிழக அரசு பழங்குடியின நிதியிலிருந்து எங்களுக்கு அசுர வேகத்தில் கான்கிரிட் குடியிருப்பை கட்டி தர வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளனர்.


வருவாயை பெருக்க மஞ்சாபுல் விதை
போலீஸ் எஸ்பி வருண்குமார் கூறுகையில், `பழங்குடியின மக்களின் வருவாயை பெருக்குவதற்கு மஞ்சாபுல் விதைகளையும் வழங்கி உள்ளேன்.  இது வளர்ப்பதன் மூலம் சம்பந்தபட்ட கம்பெனிகள் நேரடியாக வந்து மஞ்சாபுல் கொள்முதல் செய்து அதிலிருந்து வாசனை திரவியம் தயாரிக்க இது பயன்படுத்தப்படும். இதன் மூலம் இவர்களின்  வாழ்வாதாரம் மேம்படும். ஆட்டோ மூலம் அப்பகுதியை சேர்ந்த வார்டு உறுப்பினர் சேகர் அந்த பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகளை காலை மாலை இரு வேலையும் அழைத்து சென்று வருவார். இதனால் அவர்களின் கல்வி தடைபடாமல் தொடரும். மேலும் அந்த ஆட்டோவின் பராமரிப்பு செலவுகளை காவல்துறையே ஏற்கும்’ என்றார்.

Tags : Varunkumar ,
× RELATED மாணவிகள் குறித்து அவதூறு வீடியோ பாஜ பெண் நிர்வாகி கைது