×

திட்டக்குடி நகராட்சியில் 24 வார்டுகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும்

திட்டக்குடி, பிப். 12: உள்ளாட்சி தேர்தலில் திட்டக்குடி நகராட்சியில் 24 வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திட்டக்குடி பேருந்து நிலையத்தில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமை தாங்கினார். தேர்தல் பிரசார கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா கலந்து கொண்டு பேசுகையில், மாநில சுயாட்சி, தமிழ்நாட்டு மக்களின் உரிமையை பாதுகாப்பதில் நமது முதல்வருடைய ஆளுமையை பார்த்து மோடிக்கு பயம் வந்துள்ளது. அந்த பயம் தொடர்கிற வரை தான் தமிழ்நாடு தமிழ்நாடாக இருக்கும். இல்லையென்றால் கர்நாடகாவில் நடக்கிறது போல, உத்தரபிரதேசத்தில் நடக்கிறது போல, குஜராத்தில் நடக்கிறது போல மதவாதம் இங்கே வந்து விடும். இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் தான் பாஜக மதவாதம் தலை தூக்காது. நீட் தேர்வுக்கு அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை குடியரசு தலைவர் நிராகரித்தது கூட தெரியாமல் ஆட்சி செய்தவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. தமிழகத்தில் 6 கோடி மக்களுக்காக போடப்பட்ட தீர்மானத்தை திருப்பி அனுப்பும் அதிகாரம் கவர்னருக்கு யார் கொடுத்தது.

தமிழக அரசின் தீர்மானத்தை திருப்பி அனுப்பிய கவர்னரை திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தை முடக்கினோம். ஆனால் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு நாளாவது மோடியை எதிர்த்து பேசியது உண்டா. திட்டக்குடி நகராட்சியில் 24 வார்டுகளில் உள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும், என்றார். இதனை தொடர்ந்து அமைச்சர் சி.வெ.கணேசன் பேசுகையில், திட்டக்குடி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும். தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தலின் போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார். 50 ஆண்டுகளுக்கு பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, சட்டமன்ற நிதியிலிருந்து திட்டக்குடி அண்ணா பேருந்து நிலையம் முழுவதும் சுமார் ஒரு கோடி மதிப்பீட்டில் சீட் கொட்டைகள் அமைக்கப்பட உள்ளது. விவசாயிகளின் நலன் கருதி வெலிங்டன் நீர்த்தேக்கத்தை தூர்வாரி கரையை செம்மைப்படுத்தி பராமரிக்க 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திட்டக்குடியில் முதன்முதலில் நெய்வேலியில் இருந்து குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து திட்டக்குடி பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் நிரந்தர குடிநீர் வழங்கப்பட உள்ளது. இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர், 1,200 திட்டங்களை நிறைவேற்றிய ஒரே முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என பேசினார்.  கூட்டத்தில் திமுக நிர்வாகிகள், வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK alliance ,Tittakkudi municipality ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...