×

மேகதாது அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளித்தால் சமவெளி விவசாயிகள் இயக்கம் விவசாயிகளை ஒன்று திரட்டி தடுத்து நிறுத்தும்

தஞ்சை, பிப்.12: மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தால் சமவெளி விவசாயிகள் இயக்கம் தமிழக விவசாயிகளை ஒன்று திரட்டி தடுத்து நிறுத்தும் என காவிரி சமவெளி விவசாயிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழனிராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:7-2-2022 அன்று நாடாளுமன்றத்தில், ஒன்றிய சுற்றுச்சூழல் இணையமைச்சர் அஸ்வினிகுமார் சுவபே, கர்நாடகாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே சுமூக முடிவு ஏற்பட்டால் மட்டுமே மேகேதாட்டு அணைக்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி தரமுடியும் என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.

தவிரவும் காவிரி மேலாண்மை ஆணைய அனுமதியும், சுற்றுச்சூழல் அனுமதிக்கு தேவை என்றும் கூறியிருக்கிறார். ஆனால் இந்த உண்மையைத் திரித்து ஒன்றிய அரசு மேகேதாட்டு அணைக்கு விரைவில் அனுமதி தர இருப்பதாக தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதற்காக காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தள்ளிப் போடப்பட்டு வருவதாகவும் கூறியிருக்கிறார். காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தள்ளிப் போடப்படுவதன் மூலம் எப்படி அணைகட்ட அனுமதி வழங்கமுடியும் என்று தெரியவில்லை.உச்சநீதி மன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டின் சம்மதம் இன்றி காவேரி மேலாண்மை ஆணையம் அணைகட்ட அனுமதி வழங்கமுடியாது. தமிழ்நாடு அரசு இந்தத் திட்டத்திற்கு அனுமதிகோரி கர்நாடகா முன்வைக்கும் வேண்டுகோளை ஆணையக் கூட்டங்களில் எதிர்த்து திட்டத்தைத் தடுத்தே வருகிறது.

இது தொடர்பாக ஒரு வழக்கையும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடுத்திருக்கிறது. எனவே மேகேதாட்டு அணைக்கு காவிரி மேலாண்மை ஆணையமோ, ஒன்றிய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகமோ, அதன் நீர் வளத்துறையோ அனுமதிதர வாய்ப்பே இல்லை.அப்படி ஒரு முயற்சி நடந்தால் எங்களது சமவெளி விவசாயிகள் இயக்கம் ஒத்த கருத்துள்ள விவசாய சங்கங்கள் மற்றும் இடதுசாரி விவசாய சங்கங்களோடு இணைந்து அதை எதிர்த்து கடுமையாகப் போராடி அந்த முயற்சியை நிச்சயம் முறியடிக்கும். எனவே தமிழ்நாட்டு விவசாயிகள் இது குறித்து எந்த அச்ச உணர்வும் கொள்ளவேண்டாம் என சமவெளிவிவசாயிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழனிராஜன் தெரிவித்துள்ளார்.

Tags : Union government ,Megha Dadu Dam ,
× RELATED ஒன்றிய அரசு நடத்தும் நீட் தேர்வில்...