×

காவேரிப்பட்டணத்தில் வாக்குசாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

கிருஷ்ணகிரி, பிப்.11: கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணத்தில் 422 வாக்குசாவடி மையங்களில் பணிபுரியும் 2,048 வாக்குசாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் பேரூராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, பர்கூர், ஊத்தங்கரை, நாகோஜனஅள்ளி, காவேரிப்பட்டணம், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய 6 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. இதில் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நிலை 1,2,3 ஆகியோருக்கு கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் 2ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடந்தது. இந்த பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வாக்குசாவடிகளில் பணிபுரியும் 1192 அலுவலர்களுக்கும், கிருஷ்ணகிரி நகராட்சியில் பணிபுரியும் 320 அலுவலர்களுக்கும், ஊத்தங்கரை பேரூராட்சியில் பணிபுரியும் 88 அலுவலர்கள், பர்கூர் பேரூராட்சியில் 80 அலுவலர்கள், காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் 88 அலுவலர்கள், நாகோஜனஅள்ளி பேரூராட்சியில் 72 அலுவலர்கள், கெலமங்கலம் பேரூராட்சியில் 72 அலுவலர்கள், தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் 136 அலுவலர்கள் என மொத்தம் 422 வாக்குசாவடி மையங்களில் பணிபுரியவுள்ள 2,048 அலுவலர்கள் பங்கேற்றனர். அப்போது கலெக்டர் பேசுகையில், ‘தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள அனைவரும் சிறப்பாக பயிற்சி பெற்று, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,’ என்றார். அப்போது மாவட்ட வழங்கல் அலுவலர் கோபு, கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் முருகேசன், நகர் அமைப்பு அலுவலர் சாந்தி, தாசில்தார் சரவணன், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Kaveripattinam ,
× RELATED காவேரிப்பட்டினம் அருகே தபால் வாக்களித்த 101-வயது மூதாட்டி