×

திருவாடானை ஜிஹெச் பிரேத பரிசோதனை கூடத்திற்கு குளிர்சாதன வசதி வேண்டும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை

திருவாடானை, பிப். 11:     திருவாடானை  சப்டிவிஷனில் ஆர்எஸ்.மங்கலம் , திருவாடானை , எஸ்பி பட்டினம், தொண்டி,  திருப்பாலைக்குடி ஆகிய 5 காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல்  நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் விபத்துகளில் பலியாகுபவர்களின்  உடல்கள் திருவாடானை அரசு மருத்துவமனையில் தான் பிரேத பரிசோதனை  செய்யப்படும். மருத்துவமனை அருகில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் போதிய  இடவசதியும் இல்லை. மேலும் இப்பகுதியில் நீண்ட கடற்கரை சாலை இருப்பதால் அதிக  வாகனங்கள் செல்கிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும்  ஏற்படுகிறது. ஒரே நாளில் 2, 3 பிரேதங்கள் கூட பரிசோதனைக்கு கொண்டு  வரப்படுகிறது. அப்போது இடப்பற்றாக்குறை ஏற்படுவதால் பரிசோதனையின்போது  இடைஞ்சல் ஏற்படுகிறது. மேலும் டாக்டர்கள் பற்றாக்குறை, விடுமுறை நாட்கள் என  பல நேரங்களில் பிரேத பரிசோதனை தாமதமாகிறது. அப்படிப்பட்ட சமயங்களில்  குளிர்சாதன வசதியின்மையால் பிரேதம் கெட்டு விடுகிறது. அதன்பிறகே கடும்  துர்நாற்றத்துடன் பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது.

இதுகுறித்து  சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘திருவாடானை அரசு மருத்துவமனையில் விபத்தில்  பலியானார், அனாதையாக இறந்து கிடப்பவர்கள் என அடிக்கடி பிரேத பரிசோதனை  நடக்கிறது. அனாதை பிரேதங்களை சில நாட்கள் கூட வைத்திருக்க வேண்டியுள்ளது.  ஆனால் விபத்தில் இறப்பவர்களின் பிரேதங்களை உடனுக்குடன் பிரேத பரிசோதனை  செய்து கொடுக்க வேண்டியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு சனவேலி பாலத்தில்  பஸ் கவிழ்ந்த விபத்தில் ஒரே சமயத்தில் 36 பேர் பலியாகினர். அப்போது கூட  பிரேத பரிசோதனை கூடத்தில் குளிர்சாதன வசதி இல்லாததால் பிரேதத்தை பாதுகாக்க  முடியாமல் அழுகி துர்நாற்றம் வீசியது. எனவே திருவாடானை அரசு மருத்துவமனை  பிரேத பரிசோதனை கூடத்தை குளிர்சாதன வசதி கொண்டதாக விரிவுபடுத்த வேண்டும்  என்றனர்.

Tags : Thiruvananthapuram GH ,
× RELATED திருவாடானை ஜிஹெச் பிரேத பரிசோதனை...