வியாசர்பாடி எம்ஜிஆர் நகரில் வீடுகளுக்கு பட்டா வாங்கி தருவேன்: காங்கிரஸ் வேட்பாளர் டில்லிபாபு உறுதி

பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 37வது வார்டில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லிபாபு, நேற்று வியாசர்பாடி எம்ஜிஆர் நகர், தாமோதரன் நகர், கோல்டன் முல்லை வசந்தம் குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, எம்ஜிஆர் நகர் பகுதியில் பல ஆண்டுகளாக வீடுகளுக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளதால், பட்டா வாங்கி தர வேண்டும், என அப்பகுதி மக்கள் வேட்பாளர் டில்லிபாபுவிடம் கோரிக்கை வைத்தனர்.

அதற்கு அவர், நான் வெற்றி பெற்றதும், 6 மாதத்திற்குள் இங்குள்ள வீடுகளுக்கு பட்டா பெற்றுத்தர  நடவடிக்கை எடுப்பேன், என்றார். தொடர்ந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  அப்போது, இங்குள்ள சாலைகள் சிதிலமடைந்துள்ளதால், அதை பெயர்த்து எடுத்து விட்டு புதிய சாலை அமைக்க வேண்டும், என மக்கள் கோரிக்கை வைத்தனர். அதனையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். பிரசாரத்தின்போது தன்னுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர்களுக்கும், எம்ஜிஆர் நகர் மக்களுக்கும் அங்குள்ள டீக்கடை ஒன்றில் டில்லிபாபு தனது கையால் டீ போட்டு அனைவருக்கும் கொடுத்தார். இதனை அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Related Stories: