மன்னார்குடி நகர்மன்ற தேர்தலைெயாட்டி வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

மன்னார்குடி, பிப்.11: மன்னார்குடி நகர்மன்ற தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை தஞ்சை சரக டிஐஜி கயல்விழி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மன்னார்குடி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கான கவுன்சிலர் பதவிகளுக்கு வரும் 19ம்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், மொத்தம் 62,998 பேர் வாக்களிக்க உள்ளனர். 25 இடங்களில் 67 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 32 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வாக்குப்பதிவு மையங்கள் அமைந்துள்ள இடங்களில் கூடுதல் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்குப்பதிவு மையங்களில் தடையற்ற மின்வசதி, குடிநீர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு என சாய்வு தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேர்தல் நடத்தும் அலுவலர் சென்னுகிருஷ்ணன் உத்தரவின் பேரில் விரிவாக ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், மன்னார்குடி பின்லே அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையங்களை தஞ்சை சரக டிஐஜி கயல்விழி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வாக்குப்பதிவு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஎஸ்பி பாலச்சந்திரனிடம் கேட்டறிந்தார்.

மேலும், பதற்றமான 32 வாக்குப்பதிவு மையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறும், வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், அமைதியான முறையில் தேர்தல் நடைபெற அனைத்து நடவடிக்கைகளையும் பாரபட்சமின்றி மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் டிஐஜி கயல்விழி அறிவுறுத்தினார். ஆய்வின்போது, தேர்தல் நடத்தும் அலுவலர் சென்னுகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், தேர்தல் கண்காணிப்பாளர் மீராமன்சூர், நகரமைப்பு அலுவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: