×

காரைக்கால் - பேரளம் ரயில் பாதை பணிக்கு ரூ.122 கோடி ஒதுக்கீடு

காரைக்கால், பிப்.10: காரைக்கால், பேரளம் மற்றும் நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி இணைக்கும் அகல ரயில் பாதை பணிக்கு ரயில்வே பட்ஜெட்டில் ரூ.121.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக காரைக்கால் முன்னாள் திட்டத் துறை இணை இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய பொது பட்ஜெட்டுடன், ஒருங்கிணைந்த ரயில்வே பட்ஜெட்டில் வரும் 2022-23 நிதியாண்டில் காரைக்கால் -திருநள்ளாறு-அம்பகரத்தூர்-பேரளம் ரயில்வே திட்டத்துக்கும், நாகப்பட்டினம் -திருக்குவளை-எட்டுக்குடி-திருத்துறைப்பூண்டி திட்டத்துக்கும் சேர்த்து ரூ.121.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.காரைக்கால்-பேரளம், நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி ஆகிய இரு திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.39.99 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.வரும் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள, நிதியைக் கொண்டு இத்திட்டம் பூர்த்தியடையும் போது காரைக்கால், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்ட மக்கள் பயனடைவார்கள்.

பொதுமக்களுக்கு மிகுந்த நன்மை அளிக்கக்கூடிய இந்த இரு திட்டங்களையும் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என மத்திய ரயில்வே துறையும், தெற்கு ரயில்வே மண்டலத்தையும், திருச்சி ரயில்வே டிவிஷனையும் காரைக்கால் மாவட்ட மக்கள் சார்பில் கேட்டுக் கொள்வதாக கூறினார்.தற்போது உள்ள காரைக்கால்-தஞ்சை-திருச்சி வழித்தடம்,காரைக்காலை தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலம் பகுதியை இணைக்கிறது. காரைக்கால்-பேரளம் வழித்தடம் காரைக்காலையும் திருநள்ளாரும் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களுடன் இணைக்கிறது. காரைக்கால்-நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி வழித்தடம் தமிழகத்தின் தெற்கு மாவட்ட பகுதிகளை காரைக்கால் உடன் இணைக்கிறது என்றார்.

காரைக்கால்- பேரளம் ரயில்வே திட்டத்தின் மூலம் காரைக்கால், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்ட தலைநகரங்கள் இயற்கையாகவே இணைக்க கூடிய வட்ட ரயில் பாதை ஒன்று உருவாகும். காரைக்கால் துறைமுகம் அடிப்படையாககொண்ட புதிய தொழில்கள் உருவாகும். அதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள், பொருளாதார வளர்ச்சியும் காரைக்கால் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு ஏற்படும் என்றார்.மயிலாடுதுறை-திருக் கடையூர்- தரங்கம்பாடி வழித்தடத்தை கோட்டுச்சேரி வழியாக திருநள்ளாறு ரயில் நிலையத்துடன் இணைப்பதன் மூலம் திருப்பதி மற்றும் வாரணாசி போன்ற முக்கிய ஆன்மீக சந்திப்பாக திருநள்ளாறு ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.


Tags : Karaikal-Peralam ,
× RELATED நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்...