கொள்ளிடம் அருகே குலோத்துங்கநல்லூர் குளத்துக்கு வடிகால் வசதி

கொள்ளிடம், பிப்.10: கொள்ளிடம் அருகே உள்ள குலோத்துங்கநல்லூர் கிராமத்தில் உள்ள பொது குளத்துக்கு வடிகால் வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குலோத்துங்க நல்லூர் கிராமம் உள்ளது.சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் இங்கு வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு பொதுமக்களின் நலனுக்காக ஆரம்ப காலத்திலிருந்து பொதுகுளம் இருந்து வருகிறது. அங்குள்ள கிராம மக்கள் குளிப்பதற்கும்,கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும் இந்த பொது குளம் பயன்பட்டு வந்தது. இந்த குளத்துக்கு தண்ணீர் செல்லும் வகையில் வாய்க்கால் வசதியும் குளத்தில் தேங்கிய நீர் உரிய முறையில் வெளியேறக் கூடிய வடிகால் வாய்க்கால் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதனால் இக்குளத்தில் தண்ணீர் தொடர்ந்து தேங்கி அசுத்தம் ஏற்படாத நிலை இருந்து வந்தது. ஆனால் கடந்த பத்து வருட காலமாக இந்த பொது குளத்திலிருந்து எளிதில் தண்ணீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குளத்தில் உள்ள மழை நீரும் சேர்ந்து தேங்கி இருப்பதால் தண்ணீர் மாசுபட்டு மாதக்கணக்கில் பல மாதங்களாக குளத்திலேயே தேங்கி உள்ளது. இதனால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த குளத்திற்கு வழக்கமாக அமைந்துள்ள வாய்க்கால் வசதி மற்றும் வடிகால் வசதியை மேம்படுத்தி தர வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: