(செய்திஎண்01) பச்சிளம் பெண் குழந்தை மர்மச்சாவு 4வது குழந்தை என்பதால் பெற்றோரிடம் விசாரணை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில்

வேலூர், பிப்.10:வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்தது. இதுதொடர்பாக பெற்றோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊனை பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமார், விவசாயி. இவரது மனைவி கவுரி (27). தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 4வதாக கவுரி கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு கடந்த 5ம்தேதி பிரசவ வலி ஏற்பட்டது. அவரை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மறுநாள் (6ம் தேதி) அவருக்கு 4வதாக அழகான பெண் குழந்தை பிறந்தது. நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த குழந்தை லேபர் 3வது வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு இருந்து. நேற்று முன்தினம் திடீரென குழந்தை அசைவற்று இருந்துள்ளது.

இதுகுறித்து டாக்டர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. டாக்டர்கள் விரைந்து வந்து பரிசோதித்தனர். அப்போது குழந்தை இறந்தது தெரியவந்தது. இதனால் டாக்டர்கள், குழந்தையின் பெற்றோரிடம் விசாரித்தனர். இதுதொடர்பாக வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் உதவி பேராசிரியை கல்பனா புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அருண்குமார் வழக்குப்பதிந்து பெண் குழந்தை திடீரென இறந்தது எப்படி? என பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனர். மேலும் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பினர். ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 4வதாக பிறந்த பெண் குழந்தை திடீரென இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: