ஈரோடு, பிப். 9: வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் கூறினர். ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஜவுளி சந்தை நடைபெற்று வருகின்றது. வாரச்சந்தையில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கம். இந்நிலையில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனையடுத்து பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி பணம் எடுத்து வந்தால் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதோடு பறக்கும் படையினர் கெடுபிடி செய்து வருகின்றனர். இதனால், நேற்று நடந்த ஜவுளி சந்தையில் வெளிமாநிலங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால், வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், முகூர்த்த நாட்கள் என்பதால் சில்லரை வியாபாரம் மட்டும் 30 சதவீதம் நடைபெற்றதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.