×

எல்கேஜி, யுகேஜிக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 16ம் தேதி கலந்தாய்வு விவரங்களை அனுப்ப சிஇஓக்களுக்கு உத்தரவு அங்கன்வாடி மையங்களில்

வேலூர், பிப்.9:அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வரும் 16ம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கான விவரங்களை அனுப்ப சிஇஓக்களுக்கு, தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து தொடக்க கல்வித்துறை இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:அரசாணையில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளைப் பின்பற்றி 2021-22ம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணைய வழியில் எமிஸ் மூலம் பொது மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு பணிகள் கடந்த 21ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி தமிழகத்தில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் துவங்க ஆணை வெளியிடப்பட்டு, அங்கு பயிலும் மாணவர்களுக்கு பாடம் போதிப்பதற்கு அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த இடைநிலை ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பணியமர்த்தப்பட்டனர்.

தற்போது நடைபெற்று வரும் கலந்தாய்வு நிகழ்வில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை கையாளுவதற்காக அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலிருந்து பணியிடத்துடன் பணிநிரவல் மூலம் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை மீள அவர்கள் பணிபுரிந்த ஒன்றியத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் கூடுதல் தேவை உள்ள பள்ளிகளுக்கு ஈர்த்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கலந்தாய்வு வரும் 16ம் தேதி எமிஸ் இணையதளம் வழியாக நடைபெறும். எனவே அந்த பிரிவில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களின் விவரங்களை பூர்த்தி செய்து தொடக்க கல்வி இயக்குனரக மின்னஞ்சல் முகவரிக்கு, விவரங்களை அனுப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : LGG ,CEOs ,UKG ,Anganwadi Centers ,
× RELATED விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா