×

5 வாகனங்களில் எழுந்தருளிய ரங்கநாதர் பள்ளிகொண்டாவில் ரதசப்தமி

பள்ளிகொண்டா,பிப்.9:
பள்ளிகொண்டாவில் ரதசப்தமியையொட்டி, 5 வாகனங்களில் ரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ரத சப்தமி. இதனை தை மாத அமாவாசையில் இருந்து வளர்பிறையில் வரும் 7வது நாளில் சூரிய பகவான் அமைந்துள்ள கோயில்கள், பெருமாள் கோயில்களில் 7 வாகனங்களில் சுவாமி எழுந்தருளி புறப்பாடு நடைபெறுவது வழக்கம்.அதன்படி, பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் உள்ள தாயார் சன்னதி முன்பு நேற்று காலை 7 மணிக்கு சூரியபிரபை வாகனம், 9 மணிக்கு அனுமந்த வாகனம், 11 மணிக்கு சேஷ வாகனம், 3 மணிக்கு கருட வாகனம், நிறைவாக மாலை 6 மணிக்கு சந்திரபிரபை வாகனத்தில் ரங்கநாத பெருமாள் எழுந்தருளினார்.

ஒவ்வொரு வாகனத்திலும் எழுந்தருளிய சுவாமி ரங்கநாத பெருமாள் புறப்பாடு நடைபெற்று கிராமத்தில் வீதியுலா வருவது வழக்கம். கொரோனா காரணமாக இந்தாண்டும் ஆகம விதிகளுக்கு உட்பட்டு கோயில் வளாகத்தில் நடந்தது. ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளும் போதும் அர்ச்சகர்கள் கோஷ்டியுடன் பிரபந்த பாடல்களை பாடினர்.இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கொரோனா கட்டுபாடுகளுடன் முகக்கவசம் அணிந்து சமூகஇடைவெளியை கடைப்பிடித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையர் விஜயா, செயல் அலுவலர் செந்தில்குமார், ஆய்வர் ரவிக்குமார் ஆகியோர் செய்தனர்.

Tags : Rathasapthami ,Ranganathar Pallikonda ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று...