×

குற்ற வழக்குகளில் தொடர்புடைய 900 பேர் கண்காணிப்பு குமரியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீஸ் எஸ்.பி. பத்ரி நாராயணன் பேட்டி

நாகர்கோவில், பிப்.9 :  குமரி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுகிறார்கள். குமரி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. பத்ரி நாராயணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது :
குமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்தும் வகையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து 75 பறக்கும் படைகள் கண்காணிப்பு பணியில் உள்ளனர். இதுவரை a29 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களிடம் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று சந்தேகத்தின் பேரில் உள்ளவர்கள் மீது பிரிவு 109, 110 ன் கீழ் நன்னடத்தை பத்திரம் எழுதி வாங்கப்படுகிறது. இதுதொடர்பாக 123 பேரில் இதுவரை 53 பேரிடம் நன்னடத்ைத பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 795 பேர், நன்னடத்தை பத்திரம் தாக்கல் செய்து கண்காணிப்பில் உள்ளனர். அந்த வகையில் 918 பேர் கண்காணிப்பில் உள்ளனர். யார் மீதும் அரசியல் உள் நோக்கத்துடன் காவல்துறை நடவடிக்கை எடுக்க வில்லை. கடந்த காலங்களில் உள்ள குற்ற நடவடிக்கைகளின் அடிப்படையில் அவர்களை தாசில்தார், ஆர்.டி.ஓ. முன் ஆஜர்படுத்தி அவர்களும் விசாரித்து தான் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. காவல்துறை பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

குமரி மாவட்டத்தில் 1458 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 55 வாக்கு சாவடிகள் பதற்றமான வாக்குசாவடிகளாக உள்ளன. இந்த வாக்கு வாசடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற காவலர்களும் தேர்தல் பணிக்கு அழைக்கப்படுவார்கள். பொதுமக்கள் அச்சமின்றி, அமைதியான முறையில் வாக்குப்பதிவு செய்ய அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டு வருகின்றன.     மாவட்டத்தில்  மொத்தம் 421 பேரிடம் துப்பாக்கிகள் உள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகளை தொடர்ந்து, 321 பேர் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். மீதி 100 பேர், வங்கி பாதுகாப்பு பணி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளின் அடிப்படையில் கலெக்டர் அனுமதியுடன் பயன்படுத்தி வருகிறார்கள். கஞ்சா, புகையிலை, குட்கா உள்ளிட்டவற்றின் விற்பனையை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு கடந்த 40 நாட்களில், 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2021 ல் 213 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 335 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். குட்கா, புகையிலை விற்பனையை தடுக்கும் வகையில் இந்த வருடத்தில் இதுவரை 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 68 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த வருடம், 784 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 798 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஆண்டை போல் இந்த வருடமும் கஞ்சா, குட்கா, புகையிலை விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  சட்ட விரோதமாக மது விற்பனையை தடுக்கும் வகையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 393 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 398 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 798 லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின், இதுவரை 686 லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வருடத்தில் இதுவரை 6 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினர்.பேட்டியின் போது ஏடிஎஸ்பிக்கள் ஈஸ்வரன், வேல்முருகன், தனிப்பிரிவு ஆய்வாளர் பெர்னார்டு சேவியர், எஸ்.ஐ.  சம்சீர் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

நடிகர் ஆன எஸ்.பி.
போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வகையில் காவல்துறையினர் குறும்படம் தயாரித்துள்ளனர். கல்லூரி மாணவர்கள் தயாரித்த குறும்படத்தை நேற்று எஸ்.பி. பத்ரி நாராயணன் வெளியிட்டார். இந்த படத்தில் நடித்த மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். குமரி மாவட்ட காவல்துறை நடத்திய மீம்ஸ் கிரியேட்டிவிட்டி போட்டிகளில் வென்றவர்களுக்கும் பரிசு வழங்கினார். இந்த குறும்படத்தில் இளைஞர்களுக்கு அறிவுரை கூறும் போலீஸ் அதிகாரியாக
எஸ்.பி. பத்ரி நாராயணன் நடித்துள்ளார். அதில் பேசும் அவர், வாழ்க்கையை தேர்வு செய்ய 2 வழிகள் உள்ளன. இதில் நேர்மையான வழியை இளைஞர்கள் தேரவு செய்ய வேண்டும். அற்ப சுகத்துக்கு ஆசைப்பட்டு, போதைக்குள் விழுந்தால், வாழ்க்கையை திரும்ப பெற முடியாது. எனவே சரியான திசையை வாழ்வில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார். இந்த குறும்படத்தில் ஆதி என்ற இளைஞன், டென்னிஸ் வீரராக உள்ளார். காதலில் தோல்வி அடைந்து நண்பர்களின் தூண்டுதலால் கஞ்சாவுக்கு அடிமையானால் என்ன நடக்கும் என்பதை குறும்படம் விளக்குகிறது.

Tags : Badri Narayanan ,
× RELATED நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை தே.பா....