×

நாகை ரயில்வே ஸ்டேசன் ரூ.2.70 கோடியில் புதுப்பொலிவு

நாகை, பிப்.9: இந்தியாவில் உள்ள பழமையான இருப்புப் பாதைகளில் நாகையில் அமைந்துள்ள இருப்பு பாதையும் ஒன்று. கடந்த 1861ம் ஆண்டு நாகை ரயில்வே ஸ்டேசன் கட்டப்பட்டு 160 ஆண்டுகளைக் கடந்த கட்டிடத்தில் நாகை ரயில்வே ஸ்டேசன் இயங்கி வருகிறது. இவ்வாறு பழமையான ரயில்வே ஸ்டேசனில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. எனவே புதிய ரயில்வே ஸ்டேசன் கட்டிடம் கட்ட வேண்டும் என நாகை மக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகை ரயில்வே ஸ்டேசனை அழகுப்படுத்தி புதிய கட்டிடம் கட்டப்படும் என ரயில்வே துறை அறிவித்தது. இதற்காக கடந்த 2 ஆண்டுகளில் ரூ.31 லட்சம் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததால் புதிய ரயில்வே ஸ்டேசன் திட்டம் நிறைவேறாமல் இருந்தது.

இந்நிலையில் நாகை ரயில்வே ஸ்டேசனை புனரமைக்க ஒன்றிய அரசின் ரயில்வே பட்ஜெட்டில் ரூ.2.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனுடன், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தொகைகளையும் சேர்த்துத் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி ரூ.62.65 லட்சம் மதிப்பில் தரைதள பணிகளும், ரூ. 41.97 லட்சம் மதிப்பில் முதல் தள பணிகளும், ரூ.10.2 லட்சம் மதிப்பில் குடிநீர் மற்றும் வடிகால் வசதிகளும், ரூ.32.34 லட்சத்தில் அணுகுசாலை, சுற்றுப் பகுதி கட்டிடங்களும், ரூ.34.73 லட்சத்தில் நுழைவு வாயில் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளும் நடைபெற உள்ளது. இந்தப் பணியின்போது நாகை ரயில்வே ஸ்டேசன் நுழைவு வாயில் மேற்குப்புறம் நாகை டவுன் போலீஸ் ஸ்டேசன் எதிரே மாற்றி அமைக்கப்படவுள்ளது.

இது குறித்து நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்க செயலாளர் அரவிந்தகுமார் கூறியதாவது: மிகவும் பழமையான நாகை ரயில்வே ஸ்டேசனை புனரமைக்க போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் ஒப்பந்தகாரர்கள் பணியை மேற்கொள்ள வரவில்லை. இந்நிலையில் நடப்பு ஆண்டு ரூ.2.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் நாகை ரயில்வே ஸ்டேசன் புதுபொலிவு பெறும். நாகை அக்கரைபேட்டை ரயில்வே மேம்பாலம் அமையவுள்ளதால் நாகை ரயில்வே ஸ்டேசன் நுழைவு வாயில் தற்பொழுதுள்ள நாகை டவுன் போலீஸ் ஸ்டேசன் எதிரே அமையும் என்றார்.

Tags : Nagai ,
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு