×

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளின் எண்ணிக்கையை கூடுதலாக உயர்த்தி எடுக்க வேண்டும் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, பிப்.9: நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளின் எண்ணிக்கையை கூடுதலாக உயர்த்தி எடுக்க வேண்டும் என்று கலெக்டருக்கு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் வீரசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் மேலும் அவர் கூறியுள்ளதாவது, திருத்துறைப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் தற்போது அறுவடைப் பணிகள் முழு மூச்சில் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்கு ஆன்லைன் முறையில் ஏற்படும் சிறிய குளறுபடி மற்றும் கொள்முதல் செய்த நெல்லை வெளியில் எடுத்து செல்லாததாலும், விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ மூட்டை ஆரம்பத்தில் 1000 மூட்டைகள் எடுக்கப்பட்டது. பின்னர் 800 ஆக குறைந்து தற்போது ஒருநாளைக்கு 600சிப்பம் மட்டுமே பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால் அதிகளவில் நெல்மூட்டைகள் தேங்கி, விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தற்போது பிடிக்கப்படும் 600 மூட்டை என்பதை அளவை உயர்த்தி, கூடுதலாக பிடித்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.



Tags : Federation of Panchayat Leaders ,
× RELATED 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு மனு