×

பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்

பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட  தேர்தல் கண்காணிப்பாளர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர். மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சி, 8 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குச்சாவடிக்கு பாதுகாப்பு வழங்குதல், பதட்டமான வாக்குச்சாவடி குறித்தும், பிரசாரத்திற்கு அனுமதி வழங்குதல், தேர்தல் நடத்துவது மற்றும் வாக்கு எண்ணும் மையம் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.   தேர்தல் நடைபெறும் இடங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் செய்தியாளரிடம் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வந்த பிறகு, வேட்பு மனுத்தாக்கல் முடிந்து, பரிசீலனை செய்யப்பட்டு,  தகுதியுடைய வேட்பாளர்கள் வேட்பு மனு ஏற்கப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. தேர்தலுக்கான முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ளது. 318 வார்டுகளில் மூன்று பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில்  மொத்தம் 1798 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் பூந்தமல்லி நகராட்சியில் நடைபெற்றது.

இதில் எந்தவித புகாருக்கும் இடமளிக்காத வகையில் தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளை எந்த காரணத்தை முன்னிட்டும் மீறாத வண்ணம் கண்காணிக்கப்படும். அப்படி மீறும் பட்சத்தில் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இதில் அவடி மாநகராட்சி கமிஷனர் சரஸ்வதி, பூந்தமல்லி நகராட்சி கமிஷனர் நாராயணன், திருவேற்காடு நகராட்சி கமிஷனர் ரமேஷ், காவல்துறை அதிகாரிகள், மற்றும் தேர்தல் அலுவலர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள் உள்பட  பலர் கலந்துகொண்டனர்.  


Tags : Urban Local Election Consultative Meeting ,Poonamallee Municipal ,Office ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...