தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பிரசாரம் மக்கள் பணி தடையின்றி நடைபெற திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்

தூத்துக்குடி, பிப். 8: தூத்துக்குடி மாநகரில் மக்களுக்கான பணிகள் தடையின்றி நடைபெற்றிட திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று கனிமொழி எம்பி கேட்டுக் கொண்டுள்ளார். தூத்துக்குடி மாநகராட்சியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார கூட்டம், அண்ணா நகரில் நேற்று நடந்தது. அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். தமிழக காங். துணை தலைவர் ஏபிசிவி.சண்முகம், மதிமுக இளைஞரணி அமைப்பாளர் விநாயகாரமேஷ், மாநகர் மாவட்ட காங். தலைவர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கனிமொழி எம்பி கலந்துகொண்டு திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: தூத்துக்குடி மாநகரில் கடந்தாண்டு மழை வெள்ளத்தின்போது குடியிருப்புகளில் தேங்கிய மழைநீரை அகற்ற நானும், அமைச்சர் கீதாஜீவனும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால், இந்த முறை மழை வெள்ளநீர் அகற்றும் பணிகளை தமிழக முதல்வரே நேரில் வந்து பார்வையிட்டு, மக்களின் குறைகளை கேட்டறிந்ததுடன், மழைநீர் அகற்றும் பணிகளை துரிதப்படுத்தினார். இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காக அதற்கான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இதுபோன்ற திட்டங்கள் மாநகராட்சியில் தடையின்றி நடைபெற்றிட திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் அங்கு பிரதிநிதிகளாக இருந்திட வேண்டும். எனவே, அனைத்து இடங்களிலும் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் 100க்கு 100சதவீதம் வெற்றி பெற்றிடும் வகையில் வாக்குகளை பதிவு செய்திட வேண்டும், என்றார். இதில் திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: