×

சே.தோப்பு, குறிஞ்சிப்பாடி, கா.கோவில், முஷ்ணம் பகுதியில் பிற கட்சி வேட்பாளர்கள் வாபஸ் திமுகவினர் போட்டியின்றி தேர்வு

சேத்தியாத்தோப்பு, பிப். 8: தமிழகம்  முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட  பகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சேத்தியாத்தோப்பு  பேரூராட்சி மன்ற தேர்தலுக்காக 13வது வார்டில் தி.மு.க சார்பில் பொறியியல்  பட்டதாரியான தங்க குலோத்துங்கன் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தார்.  இந்நிலையில் தங்க குலோத்துங்கனை எதிர்த்து எவரும் போட்டியிடாததால்  போட்டியின்றி தங்க குலோத்துங்கன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவரை  அரசியல் பிரமுகர்கள் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் நேரில்  சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

 குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது. இதில், 84 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 8 பேர் வாபஸ் பெற்றனர். திமுக 18, அதிமுக 17, பாமக 10, பாஜக 9 உட்பட 76 பேர் களத்தில் உள்ளனர். இதில், 15வது வார்டு திமுக வேட்பாளர் தமயந்தி செங்கல்வராயன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவருக்கு, திமுக நிர்வாகிகள் சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனர்.

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளுக்கும் அனைத்து கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். இதில் 18வது வார்டான தெற்கிருப்பு எனப்படும் ராஜேந்திரசோழகன் பகுதியில் திமுக முன்னோடியும், கிழக்கு ஒன்றிய செயலாளருமான ராமலிங்கம் பக்கிரிசாமி(71) கடந்த வெள்ளியன்று வேட்புமனு அளித்தார்.

மனுக்களின் இறுதிக்கட்ட பரிசீலனை நேற்று நடந்தது. அதில் அதிமுக உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் வாபஸ் பெற்ற நிலையில் தெற்கிருப்பு ராமலிங்கம் பக்கிரிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். முஷ்ணம்: முஷ்ணம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கான  வேட்பு மனுதாக்கல் முடிவுற்ற நிலையில் நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல்  வெளியிடப்பட்டது. இதில் 14வது வார்டு தி.மு.க வேட்பாளர் செல்வி ஆனந்தனை  எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் வாபஸ் பெற்றதால் செல்வி  ஆனந்தன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று 6வது வார்டில்  போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் ரவிச்சந்திரன் போட்டியில் இருந்து வாபஸ்  பெற்று தி.மு.கவில் இணைந்துள்ளார்.இதேபோல், வடலூர் நகராட்சி வார்டு 17 சித்ரா சங்கர், வார்டு 14ல் விஜயரங்கன், கிள்ளை பேரூராட்சி வார்டு 10ல் மல்லிகா உள்ளிட்டோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Tags : S.Thoppu ,Kurinjipadi ,K.Kovil ,ஷ்Mushnam ,DMK ,
× RELATED குறிஞ்சிப்பாடி அருகே பரபரப்பு...