×

புதுகை மாவட்டத்தில் தேர்தல் நடக்கவுள்ள நகராட்சி, பேரூராட்சிகள் 20 மண்டலமாக பிரிப்பு

புதுக்கோட்டை, பிப்.9: புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ள நகராட்சி, பேரூராட்சிகள் 20 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் பார்வையாளர் மோனிகா ராணா தெரிவித்தார். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் நேற்று நடைபெற்ற மண்டல அலுவலர்களின் கூட்டத்தில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் மோனிகா ராணா பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், புதுக்கோட்டை நகராட்சியை 9 மண்டலங்களாகவும், அறந்தாங்கி நகராட்சியை 3 மண்டலங்களாகவும் மற்றும் 8 பேரூராட்சிகளையும் தலா ஒரு மண்டலம் என மொத்தம் 20 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியை கண்காணிப்பதற்கு மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மண்டல அலுவலர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும். மேலும், தேர்தல் நாளன்று சுமுகமான முறையில் தேர்தலை நடத்திட ஏதுவாக வாக்குச்சாவடி அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு, தேர்தல் தொடர்பான நிகழ்வுகளை உடனுக்குடன் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான பொருட்களை கொண்டு செல்வதற்கும், பதிவான வாக்குகள் அடங்கிய மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பான முறையில் கொண்டு செல்வதற்கான வழித்தடங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்திட வேண்டும். மாவட்டம் முழுவதும் 45 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. எனவே, மண்டல அலுவலர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் ஏதேனும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் இருக்கும்பட்சத்தில், அவற்றிற்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், 30 பறக்கும் படை குழுக்கள் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படையினர் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தேர்தல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரப்பெறும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, அனைத்து அலுவலர்களும் தேர்தல் நடைமுறைகள் மற்றும் நடத்தை விதிகள் குறித்தும் முறையாக தெரிந்துகொண்டு, தேர்தலை சுமுகமான முறையில் நடத்திட ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில், எஸ்பி., நிஷா பார்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலர்கள் செல்வி, ரம்யாதேவி (சிறப்பு), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கருணாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Pudukai district ,
× RELATED புதுகை மாவட்டத்தில் தமிழ்...