×

வ.உ.சி உயிரியல் பூங்கா அங்கீகாரம் ரத்து

கோவை:  கோவையின் அடையாளங்களில் ஒன்றாக மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்கா உள்ளது. கடந்த 1965-ம் ஆண்டு இப்பூங்கா உருவாக்கப்பட்டது. ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என 40 இனங்களில் 532 விலங்கினங்கள் வரை உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் 300 முதல் 350 பேர் வார நாட்களிலும், 1500 முதல் 2000 பேர் வரை விடுமுறை நாட்களிலும் வந்து செல்கின்றனர்.

பூங்கா மற்றும் விலங்கினங்களின் பராமரிப்பு விவகாரத்தில் பல்வேறு குறைபாடுகள் காரணமாக ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுபாடு துறையின் கீழ் செயல்படும் ஒன்றிய உயிரியல் பூங்கா ஆணையம் கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை கடந்த மாதம் ரத்து செய்துள்ளது. கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை திரும்ப வழங்க ஒன்றிய உயிரியல் பூங்கா ஆணையத்துக்கு மாநகராட்சி சார்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அங்கீகாரத்தை திரும்ப வழங்க ஒன்றிய ஆணையம் மறுத்துள்ளது.
இதனிடையே வ.உ.சி பூங்கா பராமரிப்பை தமிழக வனத்துறையின் கீழ் உள்ள உயிரியல் பூங்கா ஆணையம் மேற்கொள்ள மாநகராட்சி சார்பாக கோரிக்கை கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:  தமிழகத்தில் உயிரியல் பூங்கா ஒன்று மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் பராமரிப்பு செய்யப்படுவது கோவையில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.  உயிரியல் பூங்காவை செயல்படுத்துவதும், அதனை பராமரிப்பதும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயம். ஒரு உயிரியல் பூங்கா என்றால் எவ்வாறு  செயல்பட வேண்டும் என மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் வழிகாட்டுதல்களைத் தெரிவித்துள்ளது. மாநகராட்சி வசம் அத்தகைய நிபுணத்துவத்துக்கான பற்றாக்குறை பல்வேறு சூழல்களில் உள்ளது.  மேலும், உயிரியல் பூங்கா பராமரிப்பு குறித்து மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்துக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிக்கையானது சமர்பிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

இத்தகைய சூழலில் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் அளவுக்கு நிபுணத்துவத்தை மாநகராட்சி பணியாளர்களிடம் எதிர்பார்க்க முடியாது.அனைத்தையும் ஆலோசித்த பிறகே, வ.உ.சி. உயிரியல் பூங்காவின் பராமரிப்பை வருவாய் பகிர்வு அடிப்படையில் ஏற்றுக் கொள்ள தமிழக உயிரியல் பூங்கா ஆணையத்துக்கு சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, திருச்சி உட்பட 5 உயிரியல் பூங்காக்களை பராமரிக்கும் அனுபவம் அவர்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : WAC zoo ,
× RELATED வேளாண் பல்கலையில் கோடை கால பயிற்சி முகாம்