×

விருத்தாசலத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

விருத்தாசலம், பிப். 7: விருத்தாசலத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்திப் பெற்ற விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரதோஷம், உற்சவம், மாசிமக திருவிழா, புத்தாண்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருப்பது போல் இக்கோயிலில் உள்ள சிவனை வழிப்பட்டால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தினமும் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர். மேலும் இக்கோயிலில் 5 கோபுரங்கள், 5 நந்திகள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள் என அனைத்தும் ஐந்தால் ஆன சிறப்பம்சத்தை கொண்ட கோயிலாக அமைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2002ம் ஆண்டு கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து இருபது ஆண்டுகள் கழித்து (6ம்தேதி) நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கடந்த 2017ம் ஆண்டிலிருந்து திருப்பணிகள் நடைபெற்று திருப்பணிக் கமிட்டி குழு தலைவராக ஜெயின் ஜூவல்லரி அகர்சந்த் தலைமையிலான குழுவினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திருப்பணிகள் தீவிரமாக நடந்து முடிந்தது.
 இந்நிலையில், கடந்த 27ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 31ம் தேதி சாந்தி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, திசா ஹோமங்கள், சப்தமாதா பூஜைகள் நடந்தன. அப்போது மகா ஹோமம் வளர்க்கப்பட்டு கலசங்களுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதற்காக 81 ஹோம குண்டங்கள், 9 நவ அக்னி ஹோம குண்டங்கள், 2 பஞ்சா அக்னி ஹோம குண்டங்கள், 35 ஏகா அக்னி குண்டங்கள் அமைக்கப்பட்டு கலசங்களுக்கு கலாகர்ஷணம், பஞ்சமூர்த்தி பூஜைகளும், மாலையில் முதல் கால பூஜையுடன் புதிதாக அமைக்கப்பட்ட, 9 நவ அக்னி ஹோம குண்டங்கள், 2 பஞ்சா அக்னி ஹோம குண்டங்கள், 35 ஏகா அக்னி குண்டங்கள் உள்ளிட்ட 81 ஹோம குண்டங்களில் அமைக்கப்பட்ட 1300 கலசங்கள் வைத்து அலங்கரிக்கப்பட்டு யாகங்கள் வளர்க்கப்பட்டது.

தொடர்ந்து கடந்த 3ம் தேதி இரவு தருமபுரம் 27வது ஆதீனம் குருமகா சந்நிதானம்  ல கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முதல் கால யாக பூஜையை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால பூஜைகள், மாலை 6 மணிக்குமேல் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றது. இதற்காக சிவாச்சாரியார்கள் வாசுகி மடத்திலிருந்து விசேஷ சந்தி முடிந்து ஊர்வலமாக யாக சாலைக்கு வந்தனர். தொடர்ந்து பிரமாண்ட யாகசாலையில் மூன்றாம் கால பூஜைகள் நான்காம் கால பூஜைகள், ஐந்தாம் கால பூஜைகள் நடைபெற்று முடிந்து, நேற்று காலை 6ம் கால பூஜையுடன் யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்று சரியாக 8 மணிக்கு கோபுர விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், 8.15 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. கோயில் உள்ளே நுழைவதற்கு டோக்கன்கள் வழங்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்குள் தரிசனம் செய்தனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கோயில் வெளிப்பகுதியில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதில் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், எம்எல்ஏக்கள் ராதாகிருஷ்ணன், சபா.ராஜேந்திரன், ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக வாழும் கலை மைய நிறுவனர் ரவிசங்கர் குருஜி பெங்களூரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நெய்வேலி வந்திறங்கி அங்கிருந்து கோயிலுக்கு காரில் வந்து பூஜை செய்துவிட்டு காரில் வந்து தரிசனம் செய்து விட்டு சென்றார். தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர். தொடர்ந்து கும்பாபிஷேக விழா முடிவடைந்து 8ம் தேதி 11 - 12.30 மணிக்குள் மாசிமக பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கமிட்டி குழு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதில் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சக்திகணேசன் உள்பட 2 ஏடிஎஸ்பி, 10 டிஎஸ்பிக்கள், 40 இன்ஸ்பெக்டர்கள், 1500 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விருத்தாசலம் பகுதி முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

Tags : Varthasalam ,Kumbabishekam ,Greeswarar Temple ,
× RELATED வேதாரண்யம் அருகே பழமை வாய்ந்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்