×

அனைத்து உதவிகளையும் நிச்சயம் செய்யும் புதுச்சேரிக்கு எந்த நிதியையும் மத்திய அரசு நிறுத்தவில்லை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி

புதுச்சேரி, பிப். 7: புதுச்சேரிக்கு எந்த நிதியையும் மத்திய அரசு நிறுத்தவில்லை என மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். புதுச்சேரி மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், புதுச்சேரி மாநில நிதிநிலை தொடர்பாக மத்திய அரசிடம் நானும், பாஜக தலைவர் சாமிநாதனும், செல்வகணபதி எம்பியும் தொடர்ந்து வலியுறுத்தி பேசினோம். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக மத்திய நிதியமைச்சரை சந்தித்து பேசினோம். எங்களது கருத்துக்களை கேட்ட அவர், இதுபற்றி கண்டிப்பாக பரிசீலனை செய்வதாக கூறினார். புதுச்சேரி மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு சம்பளத்தை வழங்குவதற்காக கடந்த 3ம் தேதி ரூ.150 கோடி மத்திய அரசு விடுவித்தது. மேலும், சங்கராபரணி ஆற்றில் மேம்பாலம் கட்டுவதற்கு ரூ.70 கோடி, கொக்குபார்க்கில் இருந்து ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி சதுக்கம் வரை மேம்பாலம் கட்ட ரூ.450 கோடி என மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. புதுச்சேரி மாநிலத்திற்கு எந்த நிதியையும் நிறுத்தவில்லை.

புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு நிச்சயம் செய்யும். தீபாவளி அரிசி, பொங்கல் பொருட்கள் தற்போது எல்லா பகுதிகளிலும் போடப்பட்டு வருகிறது. ஜிப்மரின் செயல்பாடு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தெரிவித்து இருக்கிறோம். நேரடியாக புதுச்சேரி வந்து அவர் ஆய்வு செய்வதாக கூறியிருக்கிறார். முதல்வர் ரங்கசாமி- நடிகர் விஜய்  சந்திப்பு பற்றி பரபரப்பாக  பேசப்படுகிறதே? என கேட்டதற்கு, யாரை வேண்டுமானாலும் முதல்வர் சந்திக்கலாம், முதல்வரை யார்  வேண்டுமானாலும் சந்திக்கலாம். இந்த  சந்திப்பு சாதாரணமானது தான்.  மாநில முதல்வர், திரைத்துறையில் உள்ளவர்களை சந்திப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். பேச்சுவார்த்தை குறித்து முதல்வர் வெளிப்படையாக கூறவில்லையே. அதனால் கூட்டணி என்ற யூகங்களுக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது என்றார்.

Tags : Union government ,Puducherry ,Home Minister ,Namachchivayam ,
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...