×

தாணிப்பாறை வழுக்கல் அருவியில் தடுப்புச்சுவர் சேதமடைந்ததால் தண்ணீர் தேக்க முடியவில்லை: குடிநீர் தேடி கிராமங்களுக்குள் வனவிலங்குகள் படையெடுப்பு

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. மழைக்காலத்தில் கோயில் பகுதியில் இருந்து ஓடை வழியாக தண்ணீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாணிப்பாறை வழுக்கல் அருவி வழியாக கீழே உள்ள தடுப்பணையை கடந்து சென்றது. இதனால் அப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் நீர்தேடி வரும்.

இந்நிலையில் தடுப்பணை சேதமடைந்தது. எனவே, இதனை சீரமைத்து தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி காலத்தில் தடுப்பணை சேதத்தை கண்டு கொள்ளவே இல்லை. தற்போது கோடைகாலம் துவங்கி விட்டது. இதனால் குடிநீர் தேடி யானை, காட்டுமாடு, கரடி, மான், சிறுத்தை, குரங்கு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் அலைந்து திரிகின்றன. ஆனால், அப்பகுதியில் தடுப்பணை சேதமடைந்து தண்ணீர் தேங்காத காரணத்தால் வனவிலங்குகள் நீராதாரங்களை தேடி மலை அடிவாரப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் படையெடுத்து வருகின்றன. இதன் காரணமாக தென்னை, மா போன்ற பல்வேறு மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், `` கடந்த 10 ஆண்டுகளாக தடுப்பணை சேதமடைந்து கிடக்கிறது. அதை சரிசெய்ய வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை அன்றைய அதிமுக அரசும், அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் கோரிக்கைகளை தீர்த்து வருகிறார்.

எனவே, வழுக்குப்பாறை அருவிக்கு கீழே சேதமடைந்துள்ள தடுப்பணையை கட்டித்தருவடுன், வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றாற் போல அதை அமைக்க வேண்டும். மேலும் அருவிக்கு வரக்கூடிய பக்தர்கள் குளிப்பதற்கு போதிய அடிப்படை வசதிகள், கழிப்பறை, உடைமாற்றும் அறை உள்ளிட்டவற்றை செய்து தர வேண்டும். அத்துடன் இப்பகுதியில் சோலார் மின் விளக்குகளை அமைக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Thanipara ,
× RELATED வாகன சோதனையில் புகையிலை பறிமுதல்